TAPS மூலம் அரசு ஊழியர்களை ஏமாற்றிய திமுக! திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் ‘ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை’ (Unified Pension Scheme) பெயரை மட்டும் மாற்றி, ‘தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ என அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றி வருவதாக திமுக அரசுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 சட்டமன்றத் தேர்தலின் போது பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) மீண்டும் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த நான்கரை ஆண்டுகளாக அதை நிறைவேற்றாமல் அரசு ஊழியர்களை ஏமாற்றி வந்ததாக குற்றம்சாட்டினார். அரசு ஊழியர்களின் தொடர் போராட்டங்களை சமாளிக்கவும், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளவும், தற்போது ‘உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்’ (TAPS) என்ற பெயரில் ஒரு “ஏமாற்று மாடல் திட்டத்தை” அறிவித்துள்ளதாக அவர் விமர்சித்தார்.

மேலும், “எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறும் விடியா திமுக அரசு, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் பெயரை மாற்றி, அதையே தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என அறிவித்துள்ளது. இது திமுக அரசின் வழக்கமான ஸ்டிக்கர் ஒட்டும் அரசியல்தான்” என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களிடமிருந்து எந்தவித பங்களிப்பும் இல்லை என்றும், ஓய்வு பெறும் போது கடைசி மாத சம்பளத்தின் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படுவதுடன், அகவிலைப்படி மற்றும் ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில், ஊழியர்களிடமிருந்து மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவது, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் அப்பட்டமான நகலே என்றும் கூறினார்.

மேலும், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்த ஊதியக்குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஓய்வூதியம் மறுநிர்ணயம் செய்யப்படும் அம்சம், இந்த புதிய திட்டத்தில் இடம்பெறவில்லை என்றும் அவர் விமர்சித்தார். “இது ‘புதிய மொந்தையில் பழைய கள்’ என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது” என அவர் கூறினார்.

அறிக்கையின் இறுதியில், அரசு ஊழியர்கள் ஒருநாள் உண்மையை உணர்வார்கள் என்றும், தங்களை ஏமாற்றிய திமுக அரசுக்கும், அதற்கு துணைபோன சங்க நிர்வாகிகளுக்கும் வரும் தேர்தலில் உரிய பதிலை அளிப்பார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK cheated government employees through TAPS Edappadi Palaniswami strongly condemns DMK government


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->