தேமுதிக வைக்கும் பெரிய டிமாண்ட்…பிரேமலதா பேச்சால் இழுபறியில் NDA கூட்டணி! பேச்சுவார்த்தை!எடப்பாடியே ஆடிப் போயிட்டாரு! - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநில அரசியல் களம் மெல்ல மெல்ல சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் திமுகவும், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் வெற்றியை குறிவைத்து கூட்டணி அரசியலில் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன. இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) தேமுதிகவை இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை சிக்கலில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இழுபறிக்கு தேமுதிக தரப்பின் கோரிக்கைகளே முக்கிய காரணம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே உறுதியாக இடம்பிடித்துள்ளன. தற்போது தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளே மீதமுள்ளன. சில கூட்டணிக் கட்சிகளிடம் ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கை எழுந்தாலும், இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் திமுக தலைமையிடமே உள்ளது.

மறுபுறம், அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. இதற்கிடையில், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக மட்டும் இதுவரை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தாமல் இருந்து வருகிறது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகும், தேமுதிகவுக்கு கணிசமான வாக்கு வங்கி இருப்பதாக பாஜக மேலிடம் கருதுவதால், அந்தக் கட்சியை NDA-வில் இணைக்க வேண்டும் என்ற விருப்பம் மேலிடத்தில் இருந்து வெளிப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பின்னணியில், தேமுதிகவை கூட்டணியில் இணைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஜனவரி 9-ஆம் தேதி தேமுதிக மாநாட்டில் கூட்டணி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது நடக்கவில்லை. அதன் பின்னர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த பேச்சுவார்த்தையில், சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள், ராஜ்யசபா எம்பி பதவி, மேலும் பாஜக மேலிடத்தில் பேசி மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தேமுதிக தரப்பில் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த அதிமுக தரப்பு, அதிகபட்சமாக 10 தொகுதிகள் வழங்க முடியும் என்றும், ராஜ்யசபா சீட் குறித்து தேர்தலுக்குப் பிறகு பரிசீலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், அதிமுகவுக்கே இதுவரை மத்திய அமைச்சர் பதவி கிடைக்காத நிலையில், தேமுதிகவுக்காக பாஜகவிடம் அந்த கோரிக்கையை முன்வைக்க முடியாது என்றும், விரும்பினால் பாஜக மேலிடத்துடன் நேரடியாக பேசிக்கொள்ளலாம் என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரத்தை அதிமுக தலைமை பாஜக மேலிடத்துக்கு எடுத்துச் சென்றதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் மற்றும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான பியூஷ் கோயல், டெல்லியிலிருந்தபடியே பிரேமலதாவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். அந்த உரையாடலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்றும், விரைவில் சென்னை வந்து நேரில் சந்திப்பதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் தேமுதிக தரப்பு முன்வைத்த சில கோரிக்கைகள் பாஜக வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, கடந்த லோக்சபா தேர்தலில் நுாலிழையில் தோல்வியடைந்த விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பதிலளித்த பியூஷ் கோயல், முதலில் NDA-வில் இணைந்து சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளுங்கள், தமிழகத்தில் NDA ஆட்சி அமைந்த பிறகு எதிர்பார்ப்புகள் குறித்து பேசலாம் என சமாதானப்படுத்த முயன்றதாக சொல்லப்படுகிறது.

ஆனால், அந்த விளக்கத்திற்கும் தேமுதிக தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், தேமுதிகவை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்தும் இழுபறியில் இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த பேச்சுவார்த்தை எவ்வாறு முடிவடையும் என்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMDK big demand NDA alliance in a bind due to Premalatha speech Negotiations He just walked away


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->