கட்சியில் பொறுப்பு வழங்காததால் அதிருப்தி; ஆதரவாளர்களுடன் சரத்குமார் ஆலோசனை..!
Dissatisfied over not being assigned a party post Sarathkumar holds consultations with his supporters
பாஜகவில் உரிய அங்கீகாரம் கிடைக்காத அதிருப்தியில் நடிகர் சரத்குமார் தனது ஆதரவாளர்களுடன் சென்னை தி.நகரில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
பாஜகவில் தேசிய அளவில் பதவி தருவதாக அளித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றவில்லை என ஆதங்கம் தெரிவித்த அவரது ஆதரவாளர்கள், சரத்குமார் பாஜகவில் இருந்து வெளியேற வேண்டும் எனவும், மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்க வேண்டும் என சரத்குமாரிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது ஆதரவாளர்களிடம் பேசிய சரத்குமார் கொடுத்த வாக்குறுதியை அண்ணாமலை நிறைவேற்றவில்லை என்றும், அனைத்து தகுதிகளும் கொண்டுள்ள எனக்கு ஏன் தேசிய அங்கீகாரம் வழங்கவில்லை என அழகாக கேட்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நம்மை சேர்ந்தவர்கள் ஒரு 25 பேர் நாளை பியூஷ் கோயல் வரும் போது ஒரு கடிதம் எழுதி, அதனை கொண்டு சென்று கொடுங்கள். அவர்கள் நிச்சயம் செவி சாய்ப்பார்கள், நல்ல முடிவு வரும் என நம்புவோம் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தாமரையை எப்படி காட்ட வேண்டும் என்று ஒரு காலத்தில் சொல்லிக் கொடுத்தவன் இந்த நாட்டாமை. அந்த ஒற்றை தலைவரான நரேந்திர மோடி மீது கொண்ட பற்று மற்றும் ஒரு இந்தியனாக நான் இந்த கட்சியில் இணைந்தேன். நீங்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட பதவியில் சரியாக சிந்தித்து செயல்படுங்கள் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், "இங்கு வந்தவர்களில் பெரும்பாலும் 30 ஆண்டுகள் என்னுடன் பயணித்தவர்கள். அவர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அவர்களின் ஆதங்கங்கள் என்ன என நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தான் இந்த ஆலோசனை நடந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இவர்களின் 10 மாநில நிர்வாகிகளுக்கு பாஜக பொறுப்பு வழங்கியது என்றும், ஆனால் தேர்தல் நேரத்தில் எங்களுக்கு எந்த பொறுப்பும் பாஜக வழங்கவில்லை என நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், தலைவருக்கு பொறுப்பு இல்லாமல் என்ன வேலை செய்வது என கூறிவதோடு, நீங்கள் ஏன் மீண்டும் சமத்துவக் கட்சியை தொடங்க கூடாது என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஒரு பொறுப்பு இருந்தால் தான் நான் சிறப்பாக செயல்பட முடியும் என்று ஆதரவாளர்கள் கூறியதை சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது கருத்தை கடிதம் மூலம் மாநில தலைமைக்கும் தேசிய தலைமைக்கும் கடிதம் எழுத உள்ளதாகவும், திருச்சியில் நடைபெற்ற பிரதமர் மோடி கூட்டத்தில் எனது புகைப்படம் பேனரில் இல்லை என நிர்வாகிகள் ஆதங்கம் வெளிப்படுத்தியதாக கூறியுள்ளார்.
அத்துடன், கட்சியில் பொறுப்பு இருந்தால் தானே சிறப்பாக செயல்பட முடியும் என்றும், கடந்த 15 நாட்களாக எனது கருத்தை தலைமையிடம் தெரிவித்து வருகிறேன். தேசிய அளவில் பொறுப்புகள் வழங்கப்படும் என தொடக்கத்தில் கூறினார்கள். எங்கள் கருத்தை பாஜக செயல்படுத்தும் என நம்புகிறேன் என்றும், தற்போது சமத்துவ மக்கள் கட்சியை புதுப்பிக்கும் எண்ணம் இல்லை. அதேநேரம் வரும் தேர்தலில் நானோ, எனது மனைவியோ போட்டியிடப்போவதில்லை என்றும் சரத்குமார் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
English Summary
Dissatisfied over not being assigned a party post Sarathkumar holds consultations with his supporters