கூட்டுறவு அங்காடிகளில் தொடங்கப்பட்டுள்ள கிலோ ரூ.30-க்கான சன்னரக அரிசியைப் இருப்பு வைத்து விற்பனை செய்திடுக; டிடிவி தினகரன் வலியுறுத்தல்..!
Dhinakaran urges that the finequality rice introduced in cooperative stores at Rs30 per kilogram be kept in stock and made available for sale
''அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து தேவையற்ற கருத்துகளைக் கூறி மக்களைத் திசைதிருப்புவதைக் கைவிட்டுவிட்டு, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு அங்காடிகளில் தொடங்கப்பட்டுள்ள கிலோ ரூ.30-க்கான சன்னரக அரிசியைப் போதுமான அளவில் இருப்பு வைத்து விற்பனை செய்திட வேண்டும்.'' என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், குறிப்பிட்டுள்ளதாவது;
''தமிழகத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விலைவாசி உயர்வு குறித்து உணவுத்துறை அமைச்சர் ஒவ்வொரு நாளும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக்கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கூட்டுறவு அமுதம் அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்த ஒரு மணி நேரத்திலேயே அரிசி தீர்ந்துவிட்டதாகப் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள புகார், முதல்வரை போலவே அமைச்சர்களும் ரீல்ஸ் எடுப்பதற்காகவே திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
“அரிசி விலை உயரவே இல்லை; அதற்கு நானே சாட்சி” என முதலில் கூறிய உணவுத் துறை அமைச்சர், அடுத்த நாள் சென்னை போன்ற நகர்ப்புறங்களில் வாழும் மக்களையும் கிராமப்புற மக்களையும் உணவுமுறை மற்றும் சமூக அந்தஸ்தின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பிரித்துப் பார்க்கும் வகையில் பேசியதோடு, தற்போது ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து வரும் அரிசியின் வரத்து குறைந்துள்ளதாலும், அரிசி பதுக்கப்படுவதாலும் விலை உயர்ந்துள்ளதாகக் கூறி, வேறு வழியின்றி மக்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தல், பதுக்கலைத் தடுத்தல், நியாயமான விலையில் விற்பனை செய்தல் என விலைவாசி உயர்வை முன்கூட்டியே கணித்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உணவுத்துறை அமைச்சர், விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, பொதுமக்கள் வீதிக்கு வந்து கேள்வி எழுப்பத் தொடங்கியதும், முன்னுக்குப் பின் முரணான சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி மக்களைத் திசை திருப்ப முயன்றிருப்பது தவெக அரசின் இயலாமையையே வெளிப்படுத்துகிறது.
தவெக ஆட்சி அமைந்த பிறகு நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய வருவாய்த்துறை அமைச்சர், தமிழகத்தில் வழங்கப்படும் ரேஷன் அரிசி, ஆடு, மாடுகளுக்குப் பயன்படுத்தும் தரத்தில்தான் உள்ளது எனக் கூறியதும், தற்போது உணவுத்துறை அமைச்சர் தற்பெருமை பேசிக்கொண்டு, கிராமப்புற மக்கள் ரேஷன் அரிசியைத்தான் உண்கின்றனர் எனக் கூறுவதும், கிராமப்புற மக்களை ஏதோ வேற்றுக்கிரக வாசிகளைப் போலவும், அவர்களைப் பொருளாதார ரீதியாகச் சிறுமைப்படுத்தும் வகையிலும் அமைச்சர்கள் அணுகுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து தேவையற்ற கருத்துகளைக் கூறி மக்களைத் திசைதிருப்புவதைக் கைவிட்டுவிட்டு, விலைவாசி உயர்வால் மக்கள் அடைந்துவரும் பாதிப்புகளை உணர்ந்து, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவு அங்காடிகளில் தொடங்கப்பட்டுள்ள கிலோ ரூ.30-க்கான சன்னரக அரிசியைப் போதுமான அளவில் இருப்பு வைத்து விற்பனை செய்திட வேண்டும் எனத் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.''என்று தினகரன் கூறியுள்ளார்.
English Summary
Dhinakaran urges that the finequality rice introduced in cooperative stores at Rs30 per kilogram be kept in stock and made available for sale