நாமக்கல்லில் ஆய்வு கூட்டம் நடத்திய துணை முதலமைச்சர்...! பல்வேறு நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்...!
Deputy Chief Minister held a review meeting in Namakkal Inaugurated various welfare projects
தமிழக துணை முதலமைச்சர் 'உதயநிதி ஸ்டாலின்' அவர்கள், ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு கூட்டம் நடத்தி வருகிறார்.அவ்வகையில், நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவர் நாமக்கல்லுக்கு வந்து சேர்ந்தார்.இதைத்தொடர்ந்து இன்று காலை நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

இதில் கல்வி, சுகாதாரம், விளையாட்டு என ஒவ்வொரு துறையிலும் திட்டங்களின் நிலையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்தார்.இக்கூட்டத்தில் அமைச்சர்கள் மதிவேந்தன், எம்.பி.க்கள் ராஜேஷ் குமார்,பொன்னுசாமி, ராஜந்திரன், கலெக்டர் துர்கா மூர்த்தி,மாதேஸ்வரன், பிரகாஷ், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி, காவல் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துக்க கொண்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு துறைகளின் சார்பில் 139 பணிகளுக்கு ரூ.87 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டியும், ரூ.10 கோடியே 80 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 36 திட்டப்பணிகளை திறந்து வைத்தார்.
அதன் பிறகு,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட தொழில் மையம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, தொழிலாளர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை துறைகளின் சார்பில் 2,001 பேருக்கு ரூ.33 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் அவர் நாமக்கல், ராசிபுரம்,திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய நகராட்சிகள் மற்றும் நகராட்சி சுற்றுவட்டார பகுதிகளில் வசிப்பவர்களுக்கு முதற்கட்டமாக இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார்.மேலும், மாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நவீன விளையாட்டு உடற்பயிற்சி கூடத்தினை திறந்து வைத்து, நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகளை கலெக்டர் துர்காமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் செய்துள்ளனர்.மேலும், துணை முதலமைச்சர் நாமக்கல் வருகையையொட்டி கரூர்-நாமக்கல் சாலையின் இருபுறமும் கட்சி கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. துணை முதலமைச்சா் பங்கேற்க கூடிய விழா மேடைகள் முழுவதும் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது.
English Summary
Deputy Chief Minister held a review meeting in Namakkal Inaugurated various welfare projects