மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ மீது தாக்குதல்.. ஒரு லட்சம் ரூபாய் டிஎஸ்பி நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!
CPIM MLA attacked case
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபு தாக்கப்பட்ட வழக்கில், காவல் துறை டிஎஸ்பி ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
2018 ஜூன் 26 அன்று, சென்னை-சேலம் எட்டு வழிச்சாலைக்கான நிலம் கையகப்படுத்தலை எதிர்த்து செங்கம் அருகே போராட்டம் நடைபெற்றது. இதில், டில்லிபாபு மீது காவல்துறை கடுமையான தாக்குதல் நடத்தி கைது செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை மனித உரிமை மீறல் எனக் குற்றம் சாட்டி, டில்லிபாபு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்தார்.
விசாரணையில், ஆணையம் மனித உரிமை மீறல் நடைபெற்றது உறுதிசெய்து, செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி மற்றும் இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் இணைந்து டில்லிபாபுவுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த முடிவை எதிர்த்து, டிஎஸ்பி சுந்தரமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆணையத்தின் தீர்ப்பை சட்டப்படி சரியானது எனக் குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர். இதனால், மனித உரிமைகள் ஆணையம் வழங்கிய இழப்பீடு உத்தரவு அமலில் தொடரும்.