குடிசைகளை மட்டும் குறிவைக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள் - இதை இப்படியே விடக்கூடாது.. கொந்தளிக்கும் பெ.சண்முகம்! - Seithipunal
Seithipunal


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், சமீப காலமாக நீர்நிலைகளைப் பாதுகாக்கிறோம் என்கிற பெயரில் சில தனிநபர்களும், சில இயக்கங்களும் பொதுநல வழக்குகளைத் தொடுப்பதும் நீதிமன்றம் அத்தகைய குடியிருப்புகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் காலி செய்ய வேண்டுமென தீர்ப்பு எழுதுவதும் வழக்கமாகி வருகிறது.

நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று கருதாதவர்களும், கவலைப்படாதவர்களும் எவரும் இருக்க முடியாது. அதேசமயம் குடிசை வீடுகள் மட்டுமே நீர்நிலைகளை பாதிப்பது போலவும், பெரு நிறுவனங்களின் கட்டிடங்கள் மழைக்கும், வெள்ளத்திற்கும் தானாக விலகி ஆற்று நீர் செல்ல அனுமதிப்பது போலவும் நீதிமன்றங்கள் நடந்து கொள்வது ஆச்சரியமளிக்கிறது.

பயன்படுத்தப்படாத அல்லது கைவிடப்பட்ட நீர்நிலை பகுதிகளில் கூட புதிதாக அந்த நீர்நிலைகளை மீண்டும் உருவாக்கி விடுவது போன்று சாதாரண ஏழை, எளிய குடிசைவாழ் மக்களை ஆணி வேரோடு புடுங்கி தூர எறிவது போல நான்கு வாரத்திற்குள், எட்டு வாரத்திற்குள் இடத்தை காலி செய்யுங்கள் என்பது முற்றிலும் ஏற்க முடியாத ஒன்றாகும்.

சென்னை உயர்நீதிமன்றம் சமீப காலத்தில் இத்தகைய வழக்குகள் பலவற்றையும் எடுத்து நிராதரவாய் இருக்கும் மக்களை வாழ்விடத்திலிருந்து தூக்கி எறியும் தீர்ப்புகளை எழுதுவது மிகுந்த கவலையளிக்கிறது. அரசமைப்பு சட்டம் கூட மாறுதலுக்கு உள்ளாகும் சூழலில் ஏற்கனவே நீதிமன்றங்கள் இப்படி நிலை எடுத்துவிட்டன என்பதால் மாற்ற முடியாது என்று நீதிபதிகள் சொல்வதும் ஆனால், எந்தவொரு நீதிபதியும் பெரு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சுண்டு விரலை கூட அசைக்காமல் இருப்பதும், ஏழைகள் மீதே நீதிமன்றங்களும் குறி வைக்கின்றன என்பதை புலப்படுத்துகிறது.

இத்தகைய வழக்குகளில் அரசு வழக்கறிஞர்கள் மக்களின் பக்கம் நின்று வாதாட வேண்டும். மாறாக, நீதிமன்ற தீர்ப்புகள் என்பதால் அரசாங்கம்  அதை அமல்படுத்தும் போது வாழ்வதற்கு வழியற்ற சாதாரண மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆளாகிறார்கள். ஆற்றோரங்களில் வாழ்ந்தே தீருவோம் என்று யாரும் சபதமாக ஏற்றுக் கொண்டு அங்கு வந்து குடியேறுவதில்லை என்பதை கவனத்தில் கொண்டு தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்துமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

சமீபத்தில் கூட சென்னை அடையாறு கடலில் கலக்கும் கழிமுகம் உள்ள பட்டினம்பாக்கம், சீனிவாசபுரம் பகுதிகளில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களையும், அதேபோன்று திருவேற்காடு பகுதியில் கூவம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் 150க்கும் மேற்பட்ட குடும்பங்களையும் 8 வார காலத்திற்குள் அகற்ற வேண்டுமெனவும், ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

இதனால் இப்பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வுரிமையை இழந்து நிற்கதியாக நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து ஏழை, எளிய மக்களின் குடியிருப்பு உரிமையை பாதுகாக்கும் வகையில் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், அதுவரையிலும் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CPIM DMK Govt Court Order


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->