விஜய்க்கு பிரசார தடை சர்ச்சை! அனுமதி மறுப்புக்கு எதிராக தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து புகார்...!
Controversy over Campaign Ban Vijay Complaint Filed Chief Electoral Officer Against Denial Permission
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் நடத்த திட்டமிட்ட நிலையில், அதற்கான இடமாக வியாசர்பாடி முல்லை நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பகுதியை கட்சியினர் தேர்வு செய்தனர்.
இதற்கான அனுமதியை ஆன்லைன் மூலம் கோரி விண்ணப்பித்தபோது, சுமார் 3 ஆயிரம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விண்ணப்பத்தை தேர்தல் அதிகாரிகளும் காவலர்களும் ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட இடத்தில் அதிகபட்சம் 200 முதல் 300 பேர் வரை மட்டுமே நிற்க இயலும் என்ற நிலை வெளிச்சத்துக்கு வந்தது.
இதனால் பெரும் கூட்டம் திரண்டால் நெரிசல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் உருவாகும் அபாயம் உள்ளதாக கருதி, பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேசமயம், மாற்று இடம் ஒன்றை தெரிவிக்குமாறு அதிகாரிகள் பரிந்துரைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விஜய், இது ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான தடையாகும் என கடும் கண்டனம் வெளியிட்டார்.
“தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரத்தை தடுக்க அதிகாரிகள் முயற்சிப்பது, ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் பாசிச அணுகுமுறை” என அவர் குற்றம்சாட்டினார்.
இதனைத் தொடர்ந்து, பிரசார அனுமதி மறுப்பு தொடர்பாக நேரடியாக நடவடிக்கை எடுக்க சென்னை தலைமைச் செயலகத்துக்கு சென்ற விஜய், தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்களை சந்தித்து, பிரசாரத்துக்கு உரிய அனுமதி வழங்குமாறு மனு அளித்துள்ளார். இந்த சம்பவம் தேர்தல் சூழலில் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Controversy over Campaign Ban Vijay Complaint Filed Chief Electoral Officer Against Denial Permission