காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏன்? 29 + 2 ராஜ்யசபா சீட் கேட்கும் காங்கிரஸ்! 24+1 இழுத்துப் பிடிக்கும் திமுக! ராகுல் எடுக்கப்போகும் முடிவு!
Congress wants 29 2 Rajya Sabha seats DMK wants Rahul decision
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரப்பூர்வ ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
நேற்று ஒரே நாளில் காங்கிரஸ் உட்பட 9 கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (ஐயூஎம்எல்) மற்றும் மனிதநேய மக்கள் கட்சியுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இரு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐயூஎம்எல் ஏணி சின்னத்திலும், மமக உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட உள்ளன.
இதனிடையே காங்கிரஸ் கட்சியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது. தகவல்களின் படி, காங்கிரஸ் தரப்பு 29 சட்டசபை தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்களை கோரியுள்ளது. அதற்கு பதிலாக திமுக 23 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா இடம் வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக காங்கிரஸ் 40க்கும் மேற்பட்ட தொகுதிகளை கோரியிருந்தாலும், கூட்டணி விரிவடைந்துள்ள சூழலில் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், 25 தொகுதிகளில் போட்டியிட்ட கடந்த தேர்தலை விட குறைவாக ஏற்க முடியாது என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
திமுக தரப்பு, இந்த முறை கூட்டணி பெரிதாகி இருப்பதால் அனைத்து கட்சிகளும் தங்கள் கோரிக்கைகளை குறைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளதாக வலியுறுத்தியுள்ளது. வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் சூழலில் சமரச மனப்பான்மையுடன் அணுக வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “பேச்சுவார்த்தை சுமுகமாகவும் நம்பிக்கையுடனும் நடைபெறுகிறது. எங்கள் கோரிக்கைகளை தெரிவித்துள்ளோம். திமுக தரப்பு பரிசீலிப்பதாக கூறியுள்ளது. கூட்டணி கொள்கை ரீதியான, மதவாதத்திற்கு எதிரான உறுதியான கூட்டணி” என தெரிவித்துள்ளார். தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக வெளியான தகவல்களை அவர் மறுத்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் கிரிஷ் சோடங்கரும், “கடந்த முறையை விட அதிக தொகுதிகள் கோரியுள்ளோம். ஆட்சியில் பங்கு குறித்தும் பேசியுள்ளோம். விரைவில் மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது” என கூறினார்.
இதனால், 29 மற்றும் 23 தொகுதிகளுக்கிடையிலான எண்ணிக்கை வேறுபாடு காரணமாக இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இரு தரப்பும் சமரசப் புள்ளியைத் தேடி வருகின்றன. அடுத்த சுற்று பேச்சுவார்த்தையில் தொகுதி எண்ணிக்கை உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Congress wants 29 2 Rajya Sabha seats DMK wants Rahul decision