காங்கிரஸ் – தவெக கூட்டணி பேச்சு: திபிரிகிறதா திமுக - காங்கிரஸ் கூட்டணி? அதிமுக முகாமில் உற்சாகம்! நடப்பது என்ன?
Congress tvk alliance talks Is the DMK Congress alliance falling apart Excitement in the AIADMK camp What going on
காங்கிரஸ் கட்சியுடன் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கூட்டணி அமைக்கும் சூழல் உருவாகி வருவதாக வெளியாகும் தகவல்கள், தமிழக அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு முதலே திமுக கூட்டணி உறுதியானதாக இருந்து வந்த நிலையில், 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கோரத் தொடங்கியிருப்பது, அந்த கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழலை உருவாக்கியுள்ளது. இந்த நிலையை அதிமுக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முயன்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விக்கிரவாண்டி மாநாட்டில் தவெக தலைவர் விஜய் “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கையை முன்வைத்தது, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழக அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு முன்பு விசிக, சிபிஐ, சிபிஎம், மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள், ஆட்சியில் பங்கு கேட்க மாட்டோம் என தெளிவாக அறிவித்திருந்தன. ஆனால் தற்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், குறிப்பாக மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, கார்த்தி சிதம்பரம், பிரவீன் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் திமுகவிடம் நேரடியாக ஆட்சியில் பங்கு கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ஆட்சியில் பங்கு குறித்து பேசி வருகின்றன. மத்திய அமைச்சர் அமித்ஷா, “கூட்டணி ஆட்சி” என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருவதால், எடப்பாடி பழனிசாமி தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படையாக கூற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
இந்தச் சூழலில், காங்கிரஸ் – திமுக உறவு எதிர்காலத்தில் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்தார். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கை நழுவும் நிலையில் உள்ளது என்றும், அதிமுக ஒரு பலமான கூட்டணியாக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் கூறியது, அதிமுக தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களான தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு ஓரளவு பாரம்பரிய செல்வாக்கு உள்ளது. இந்த பகுதிகளில் திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தால் வெற்றி எளிதாகும் என்ற கணக்கு இருந்த நிலையில், அந்த கூட்டணி உடைந்தால் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று அரசியல் கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக, களத்தில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிக உற்சாகத்துடன் தேர்தல் பணிகளில் இறங்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் – தவெக கூட்டணி பேச்சு உண்மையாகுமா, அல்லது திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது வரும் நாட்களில் தமிழக அரசியல் களத்தில் முக்கிய திருப்பமாக அமையப்போகிறது.
English Summary
Congress tvk alliance talks Is the DMK Congress alliance falling apart Excitement in the AIADMK camp What going on