ஆட்சியில் பங்கு..60 சீட் கேட்குது காங்கிரஸ் கட்சி! தேர்தல் வருவதால் விஜய்க்கு சப்போர்ட்.. செல்லூர் ராஜு அட்டாக்! - Seithipunal
Seithipunal


வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு நடிகர் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து வருவதாகவும், திமுகவிடம் 60 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைத்துள்ளதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட பரவை பேரூராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கலையரங்கத்தை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டுமே திட்டங்களை அறிவித்து நாடகமாடுவதாக விமர்சித்தார். பொதுமக்களின் கோரிக்கைகள் 100 நாட்களில் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததாக கூறிய செல்லூர் ராஜு, அரசு ஊழியர்களுக்கு உண்மையான பலன்கள் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாக தேர்தலில் வாக்குறுதி அளித்து திமுக வெற்றி பெற்றதாகவும், ஆனால் ஐந்து ஆண்டுகள் எதையும் செய்யாமல் ஆட்சி முடிவடையும் தருணத்தில் புதிய பெயர்களில் திட்டங்களை அறிவிப்பதாகவும் அவர் கூறினார். அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதே இதற்கான சான்று என்றும் தெரிவித்தார். பொங்கல் தொகுப்பாக ரூ.5,000 வழங்குவதாக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கூறிய ஸ்டாலின், தற்போது ரூ.3,000 மட்டுமே வழங்கியுள்ளார் என்றும் விமர்சித்தார். மக்கள் திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துவிட்டதாகவும், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாத விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, நடிகர் ஜீவா தனது ‘ஜிப்சி’ படத்திலேயே சென்சார் போர்டு பல இடங்களில் கத்தரித்ததாக கூறியதை நினைவூட்டினார். அப்போது யாரும் குரல் கொடுக்கவில்லை என்றும், தற்போது தேர்தலை மனதில் வைத்தே சிலர் சென்சார் போர்டை எதிர்த்து பேசுவதாகவும் அவர் கூறினார். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே தற்போது சென்சார் போர்டுக்கு எதிராகவும், விஜய்க்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருவதாகவும், இதன் பின்னணியில் தேர்தல் அரசியல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக பேசிய செல்லூர் ராஜு, திமுக ஆட்சியில் தான் ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தன்னெழுச்சி போராட்டங்களுக்குப் பிறகு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் நிலவரத்தை எடுத்துச் சொல்லி ஜல்லிக்கட்டு மீண்டும் நடத்த வழிவகுத்ததாகவும் தெரிவித்தார். ஜல்லிக்கட்டை பாரம்பரியமாக கிராம மக்கள் தான் நடத்த வேண்டும் என்றும், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற இடங்களில் திமுக அமைச்சர்களின் தலையீட்டால் கட்சிக்காரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்ததாகவும், ஆனால் இதுவரை அந்த தொகை வழங்கப்படவில்லை என்றும் செல்லூர் ராஜு குற்றம்சாட்டினார். இதனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க வரும் முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் காளை வளர்ப்பவர்கள் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் எனக் கேட்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress party is asking for a share in the government 60 seats Support for Vijay as elections are coming Selloor Raju attacks


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->