இந்தி, சமஸ்கிருதத்தை திணித்தால், அதற்கான விலையை மோடி அரசு கொடுக்க வேண்டியிருக்கும் - மாணிக்கம் தாகூர்!
congress manikkam warn to central govt
தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேசிய கல்விக் கொள்கையின்படி இந்த கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்து மும்மொழி கொள்கை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
3-வது மொழி என்பது மாணவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தக்கூடியது என்பது உலகம் முழுவதும் உள்ள கல்வியாளர்களின் கருத்து. தமிழ், ஆங்கிலம் என்ற இரு மொழிக் கொள்கையாலும், பெரும் அழுத்தத்தை தராத மாநிலப் பாடத் திட்டத்தாலும்தான் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கல்வித் துறையில் பெரும் சாதனைகளை நிகழ்த்தி உள்ளன.
கல்வியில் மட்டுமல்லாது, சமூக, பொருளாதார ரீதியாக தமிழ்நாடு வளர்ச்சி அடைந்ததற்கு இரு மொழிக் கொள்கையே காரணம். ஆனால், தங்களது குறுகிய அரசியல் காரணங்களுக்காக, இந்தி, சமஸ்கிருதத்தை இந்தியாவின் மொழியாக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களின் எதிர்காலத்தை பாழ்படுத்தும் ஆபத்தான விளையாட்டை மோடி அரசு துவங்கியிருக்கிறது. இதைவிட மோசமான, அருவருக்கத்தக்க, பாசிச செயல்பாடு எதுவும் இருக்க முடியாது.
எனவே, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மும்மொழி கட்டாயம் என்ற அறிவிப்பை மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். பள்ளிக் கல்வியை 100 சதவீதம் மாநில அரசுகளிடம் விட்டுவிட வேண்டும். அவர்களால் உள்ளூர் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டே அதற்கேற்ப கொள்கைகளையும், பாடத்திட்டங்களையும் வகுக்க முடியும். மும்மொழி கொள்கை என்பது மிகமிக ஆபத்தானது.
மாணவர்களை பாதிப்பதோடு, இந்தியாவின் ஒற்றுமை, சமூக நீதி, மதச்சார்பின்மை கொள்கையில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் ஒற்றுமையை சிதைக்கும். இதையும் மீறி இந்தி, சமஸ்கிருதத்தை திணித்தே தீருவோம் என்றால் அதற்கான விலையை மோடி அரசு கொடுக்க வேண்டியிருக்கும்.
English Summary
congress manikkam warn to central govt