'கடன் தொகையில் உத்தரபிரதேச மாநிலத்தை விட தமிழக நிலைமை மோசம்'; காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி..!
Congress leader Praveen Chakravarty says Tamil Nadu situation is worse than Uttar Pradesh in terms of debt
திமுக எம்பி கனிமொழி, 'அதிமுக ஆட்சியை விட்டு வெளியேறியபோது தமிழகம் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. எந்த வளர்ச்சியும் இல்லாமல், கடன் சுமையால் சூழப்பட்டிருந்தது என திருப்பூரில் நிருபர்களிடம் குறிப்பிட்டார்.
அத்துடன், தற்போது தமிழகத்தை முன்னேறிய, வளர்ந்த மாநிலமாக திமுக அரசு மாற்றியுள்ளது என்றும் தெரிவித்தார். இதனை மேற்கோள் காட்டி சமூக வலைதளத்தில், காங்கிரஸ் தகவல் பகுப்பாய்வு குழுத் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
''அனைத்து மாநிலங்களை விடவும் அதிக கடன் நிலுவையில் உள்ள மாநிலம் தமிழகம். 2010-ஆம் ஆண்டில், உ.பி., தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கடனுடன் இருந்தது. இப்போது, உ.பி.,யை விட தமிழகத்துக்கு அதிக கடன் உள்ளது.

வட்டிச் சுமையின் சதவீதத்தில், பஞ்சாப் மற்றும் ஹரியானாவுக்குப் பிறகு தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், இரண்டுமே கொரோனாவிற்கு முந்தைய நிலைகளை விட இப்போது அதிகமாக உள்ளது. தமிழகத்தின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.'' என்று பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
இவர், ஏற்கனவே தவெக தலைவர் நடிகர் விஜய்யை சந்தித்து பேச்சு நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் காங்கிரஸ் திமுக கூட்டணியிலும், அகில இந்திய அளவில் இண்டி கூட்டணியில் இரு கட்சிகளும் உள்ளன. இந்த நிலையில்,நடிகர் விஜய்யுடன், அதுவும் ராகுலுக்கு நெருக்கமானதாக கருதப்படும் பிரவீன் பேச்சு நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது பிரவீன் மீண்டும் திமுகவினரை சீண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
English Summary
Congress leader Praveen Chakravarty says Tamil Nadu situation is worse than Uttar Pradesh in terms of debt