திமுகவிடம் 6 அமைச்சர் பதவி கோரும் காங்கிரஸ் – இல்லைன்னா விஜய் கிட்ட போயிடுவோம்.. காங்கிரஸ் போடும் பிளான்! அதிர்ச்சியில் திமுக!
Congress demands 6 ministerial posts from DMK otherwise we will go to Vijay Congress plan DMK in shock
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக – காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் திமுக மீது இதுவரை இல்லாத அளவுக்கு அரசியல் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆட்சியில் பங்கு வேண்டும், குறைந்தது 6 முக்கிய அமைச்சரவை பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் முன்வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கோரிக்கைக்கு திமுக உறுதி அளித்தால் மட்டுமே கூட்டணியைத் தொடர்வோம் என்ற நிலைப்பாட்டில் காங்கிரஸ் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முக்கிய முடிவு தொடர்பாக, டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நாளை மாலை 4 மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. மேலிடத் தலைவர்கள் முன்னிலையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திமுகவுடன் தொடர்வதா அல்லது மாற்று கூட்டணியைத் தேடுவதா என்ற இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இடம்பெற்று வந்தாலும், மாநில அரசில் நேரடி அதிகாரப் பங்கு கிடைக்காதது காங்கிரஸ் தலைமையிடம் தொடர்ந்து அதிருப்தியை ஏற்படுத்தி வந்துள்ளது. தற்போது அந்த அதிருப்தி வெளிப்படையான அரசியல் அழுத்தமாக மாறியுள்ளது. திமுகவிடம் கூடுதல் சட்டமன்றத் தொகுதிகளோடு, முதன்முறையாக தமிழக அமைச்சரவையில் பங்கு கேட்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. “எம்எல்ஏ சீட் மட்டும் போதாது; ஆட்சியில் பங்கு அவசியம்” என்பதே காங்கிரஸின் நிலைப்பாடு என கூறப்படுகிறது.
இந்த சூழலில், காங்கிரஸ் கட்சிக்குள் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒரு பிரிவினர், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைப்பதே அரசியல் ரீதியாக லாபகரமானது என வாதிடுகின்றனர். தவெகவுடன் இணைந்தால், அதிக தொகுதிகளில் போட்டியிடவும், துணை முதல்வர் பதவி, அமைச்சரவை இடங்கள், மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் உள்ளிட்ட அதிகாரப் பகிர்வுகளைப் பெறவும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். தவெக முதல் தேர்தலிலேயே சுமார் 20 சதவீத வாக்கு வங்கியைப் பெறக்கூடும் என்ற கணக்கையும் இந்த பிரிவு முன்வைக்கிறது.
இதற்கு மாறாக, ப.சிதம்பரம், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் திமுகவுடன் கூட்டணியைத் தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. திமுகவுடன் இருந்தால்தான் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பும், பாதுகாப்பான அரசியல் எதிர்காலமும் உறுதி செய்யப்படும் என்பதே அவர்களின் வாதம்.
கடந்த சில வாரங்களாக நடந்த சம்பவங்கள், இந்த கூட்டணிக்குள் உள்ள பதற்றத்தை வெளிப்படுத்தின. கடந்த ஆண்டு டிசம்பர் 5 அன்று காங்கிரஸ் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி நடிகர் விஜயை சந்தித்தது, திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதன்பின்னர் அவர் வெளியிட்ட தமிழ்நாட்டின் கடன் குறித்த எக்ஸ் பதிவு, கூட்டணிக்குள் கடும் எதிர்வினைகளை உருவாக்கியது. அந்த கருத்தை ப.சிதம்பரம் வெளிப்படையாக மறுத்ததும், பின்னர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து திமுகவுடன் தங்களின் ஒற்றுமையை வலியுறுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வென்ற காங்கிரஸ், இந்த முறை 35 முதல் 50 தொகுதிகள் வரை வேண்டும் என்று கோரி வருகிறது. அதோடு, திமுக தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்காமல், மைனாரிட்டி அரசாகவோ அல்லது கூட்டணி அமைச்சரவையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அழுத்தத்தையும் காங்கிரஸ் தரப்பில் இருந்து முன்வைக்கப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் கூட்டணி ஆட்சியில் அமைச்சரவை பகிர்ந்துகொண்ட மாதிரியை தமிழ்நாட்டிலும் பின்பற்ற வேண்டும் என்பதே காங்கிரஸின் கோரிக்கை.
மேலும், அதிகாரப் பகிர்வின் ஒரு பகுதியாக 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளையும் காங்கிரஸ் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “நாங்கள் கேட்பதை மட்டுமல்ல, அதைவிட அதிகமாக வழங்க தவெக தயாராக இருக்கிறது” என்று திமுகவுக்கு மறைமுகமாகவும், நேரடியாகவும் காங்கிரஸ் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் திமுக தலைமையிடம் கடும் நெருக்கடி உருவாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒருபுறம் நீண்டகால கூட்டணியை காப்பாற்ற வேண்டிய கட்டாயம், மறுபுறம் காங்கிரஸின் அதிகரிக்கும் கோரிக்கைகள் – இந்த இரண்டுக்கும் நடுவில் திமுக எந்த முடிவை எடுக்கும் என்பது, 2026 தேர்தலுக்கான தமிழக அரசியலின் முக்கிய திருப்பமாக அமையப்போகிறது. நாளை நடைபெறும் டெல்லி கூட்டத்துக்குப் பிறகு, இந்த அரசியல் சஸ்பென்ஸுக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Congress demands 6 ministerial posts from DMK otherwise we will go to Vijay Congress plan DMK in shock