பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் ஸ்ரீலீலா மற்றும் மீனாக்ஷி சௌத்ரி! இயக்குனர் யார் தெரியுமா? வெளியான தகவல்!
Srileela and Meenakshi Choudhary to pair up with Pradeep Ranganathan Do you know who the director is Information released
அடுத்தடுத்த வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில், குறிப்பாக இளசுகள் மத்தியில் தனித்த இடத்தை பிடித்த நடிகராக பிரதீப் ரங்கநாதன் இன்று மாறியுள்ளார். தற்போது அவர் நடித்துள்ள LIK திரைப்படம் விரைவில் வெளியாக இருக்க, அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தில் அவர் மீண்டும் இயக்குநராகவும் கதாநாயகனாகவும் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புதிய படத்தில், பராசக்தி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் கவனம் பெற்ற ஸ்ரீலீலா மற்றும் கோட் பட நடிகை மீனாட்சி சௌத்ரி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், இளைய ரசிகர்களை கவரும் கதையமைப்பு மற்றும் எளிய சொல்லாடலால் குறுகிய காலத்திலேயே தனித்த அடையாளம் பெற்றார். அதனைத் தொடர்ந்து, லவ் டுடே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அவர், இயல்பான நடிப்பு மற்றும் இளமை ததும்பும் நடையால் பெரிய வெற்றியை பெற்றார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸிலும் எதிர்பார்ப்பை மீறிய வசூலை ஈட்டியது.
அதன்பின், அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படத்தில் நடித்த பிரதீப், கல்லூரி மாணவர்களிடையே மீண்டும் வரவேற்பை பெற்றார். தொடர்ந்து இந்த ஆண்டு கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் வெளியான டியூட் படத்தில், கௌரவ கொலை, பெண்களை மதிக்கும் சமூகப் பொறுப்பு போன்ற கருத்துகளை முன்வைத்து நடித்தார். மமிதா பைஜூ, சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம், பிரதீப் ரங்கநாதனின் நடிப்பு வளர்ச்சியை வெளிப்படுத்தியதாக பேசப்பட்டது.
தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள LIK திரைப்படம், பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்திற்குப் பிறகு, பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தை தானே இயக்கி, அதில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை பெரும்பாலும் ஜாலியான கல்லூரி மாணவர் கதாபாத்திரங்களில் நடித்துவந்த பிரதீப், இந்த புதிய படத்தில் முற்றிலும் மாறுபட்ட, அதிரடியான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கதாநாயகிகளாக ஸ்ரீலீலா மற்றும் மீனாட்சி சௌத்ரி இணைவதால், இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. LIK படம் வெளியான பிறகு, தனது அடுத்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதீப் ரங்கநாதன் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Srileela and Meenakshi Choudhary to pair up with Pradeep Ranganathan Do you know who the director is Information released