வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை: தலைமைச் செயலகத்தில் அரசு உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!
CM Vijay Chairs High-Level Review Meeting on Northeast Monsoon Preparedness Directs Officials to Take Precautionary Measures
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை மற்றும் பருவமழையை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த உயர்நிலைக் ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மாநிலத் தலைமைச் செயலாளர் சாய் குமார், பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளர்கள் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். பருவமழைக் காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், வெள்ளத் தடுப்புப் பணிகள், நிவாரண முகாம்களின் தயார்நிலை மற்றும் வடிகால் தூர்வாரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் விஜய் விரிவாகக் கேட்டறிந்து அதிகாரிகளுக்குத் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கினார்.
குறிப்பாக, தலைநகர் சென்னையில் மழைக்காலங்களில் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுக்கும் பொருட்டும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனுக்குடன் விரைவுபடுத்தும் வகையிலும் சென்னை மாநகராட்சியின் மண்டல வாரியாக ஐஏஎஸ் (IAS) அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் உடனடியாக வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், தடையற்ற குடிநீர் விநியோகம், மின்சாரப் பாதுகாப்பு வசதிகளைச் சீராகப் பராமரித்தல் போன்ற அத்தியாவசியப் பணிகளைத் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளத் தேவையான மீட்ப உபகரணங்கள், படகுகள் மற்றும் மரங்களை அகற்றும் இயந்திரங்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்க 24 மணி நேரமும் இயங்கும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துக் தீவிரமாகக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில அரசு சார்பில் பருவமழை முன்னேற்பாடுகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
English Summary
CM Vijay Chairs High-Level Review Meeting on Northeast Monsoon Preparedness Directs Officials to Take Precautionary Measures