'சிறைபிடிக்கப் பட்ட தமிழக மீனவர்கள் தாயகம் திரும்ப உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்'; வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!
CM Stalin writes to External Affairs Minister requesting immediate action to return Tamil Nadu fishermen to their homeland
இலங்கை கடற்படையினரால் 12 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு, 09 மீனவர்கள் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில், 03 மீனவர்களுக்கு ஆறு மாத கடுங்காவல் சிறைத்தண்டனையும், இலங்கை ரூபாய் மதிப்பில் தலா 11.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதனை சுட்டிக்காட்டி, விடுவிக்கப்பட்ட மீனவர்கள் உடனடியாக தாயகம் திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
''இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தைச் சேர்ந்த 03 மீனவர்கள் மற்றும் 28.12.2025 அன்று மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 09 மீனவர்கள் என மொத்தம் 12 தமிழக மீனவர்களில், 09 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மூன்று மீனவ படகு ஓட்டுநர்களுக்கு ஆறு மாத கடுங்காவல் தண்டனையும், இலங்கை ரூபாய் மதிப்பில் தலா 11.60 லட்சம் அபராதமும், அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் கூடுதலாக மூன்று மாத சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்துள்ளது.
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 09 மீனவர்களும் 05.02.2026 அன்று மிரிஹானா தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். தாயகம் திரும்புவதில் உள்ள நடைமுறை தாமதம் காரணமாக அவர்கள் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நம் நாட்டு மீனவர்கள் அங்கு சந்திக்கும் கடினமான சூழ்நிலையையும், மீனவர்களின் குடும்பங்கள் இங்கு எதிர்கொள்ளும் துயரங்களையும் கருத்தில் கொண்டு, விடுவிக்கப்பட்ட மீனவர்களை விரைவில் தாயகம் திரும்ப தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.'' என்று அந்த கடிதத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
CM Stalin writes to External Affairs Minister requesting immediate action to return Tamil Nadu fishermen to their homeland