அரசு வளங்களைச் சிக்கனப்படுத்தும் மத்திய அரசு: மூத்த அதிகாரிகளுக்கு 'ஒருவர், ஒரு வாகனம்' மட்டுமே என அதிரடி உத்தரவு!
Central Government Mandates One Official One Vehicle Policy to Curb Misuse and Cut Costs
மத்திய அரசு, அரசு அதிகாரிகளுக்கான வாகனப் பயன்பாடு மற்றும் நிர்வாகம் குறித்துப் புதிய மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதன்படி, மத்திய அரசுத் துறைகளில் பணியாற்றும் மூத்த அதிகாரிகளுக்கு இனிமேல் 'ஒரு அதிகாரிக்கு, ஒரு அரசு வாகனம்' என்ற புதிய கொள்கை திட்டவட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. அதிகார வரம்பைப் பயன்படுத்தி அரசு வாகனங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தவும், தேவையற்ற இரட்டிப்புப் செலவீனங்களைத் தவிர்க்கவும், பொதுமக்களின் வரிப்பணத்தை உள்ளடக்கிய பொது வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும் இந்த அதிரடி நடவடிக்கையை நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத் துறை மேற்கொண்டுள்ளது.
கூடுதல் பொறுப்புகளுக்குத் தனி வாகனம் கிடையாது
புதிய விதிமுறைகளின்படி வெளியான அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கட்டுப்பாடுகள்:
கூடுதல் வாகனங்களுக்குத் தடை: ஒரு மூத்த அதிகாரிக்கு ஏற்கனவே ஒரு அரசு வாகனம் முறையாக ஒதுக்கப்பட்டிருந்தால், அவர் வேறு ஏதேனும் அமைச்சகம், துறை, பொதுத்துறை நிறுவனம் அல்லது தன்னாட்சி அமைப்புகளில் கூடுதல் பொறுப்பு (Additional Charge) வகித்தாலும் அவருக்குக் கூடுதலாக மற்றொரு வாகனம் ஒதுக்கப்படக் கூடாது.
பழைய வாகனப் பயன்பாடு: கூடுதல் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள், தாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி வரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலுவல் வாகனத்தையே தற்போதைய அனைத்துப் பணிகளுக்கும் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
பொதுத்துறை வாகனங்களுக்குத் தடை: அலுவல் ரீதியான அங்கீகரிக்கப்பட்ட சுற்றுப்பயணங்களின் போது மட்டுமே பிற துறை வாகனங்களைப் பயன்படுத்தலாம். அதைத் தவிர்த்து, தன்னாட்சி அமைப்புகள் அல்லது அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான வாகனங்களை மத்திய அரசு அதிகாரிகள் தங்களது அன்றாடப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு விதிகளின் தொடர்ச்சி
கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி முதன்முதலாக வெளியிடப்பட்ட விரிவான வழிகாட்டுதல்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலேயே தற்போதைய திருத்தப்பட்ட இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய விதிகளின்படி, தகுதியுள்ள அதிகாரிகள் மாதாந்திரப் போக்குவரத்திற்கு வழங்கப்படும் படியைத் தவிர்த்து, மாதம் ரூ. 3,000 கட்டணம் செலுத்தி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாகனத்தை மாதத்திற்கு 500 கி.மீ. வரை தனிப்பட்ட பயணங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசின் இறுதி எச்சரிக்கை: நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், அரசு நிதி வீணடிக்கப்படுவதைத் தடுக்கவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த 'ஒரு தகுதியுள்ள அதிகாரிக்கு ஒரு அலுவல் கார்' என்ற கொள்கையை அனைத்து மத்திய அமைச்சகங்களும், அரசுத் துறைகளும் எவ்வித சமரசமுமின்றிப் பின்பற்ற வேண்டும். மேலும், ஒதுக்கப்படாமல் பயன்பாட்டில் இல்லாத உபரி வாகனங்களைப் பாதுகாப்பாகப் பராமரிக்கவும் அனைத்து அரசுத் துறைகளுக்கும் கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
Central Government Mandates One Official One Vehicle Policy to Curb Misuse and Cut Costs