தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல்! திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகள் ஏன் விடுபட்டன? இதுதான் காரணம்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல்வர் விஜய் போட்டியிட்டு பின்னர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உள்ளிட்ட மேலும் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. இதற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் காலியாக உள்ளன. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

அதேபோல், கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி. விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி எம்எல்ஏ ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் தொகுதி எம்எல்ஏ இசக்கி சுப்பையா ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிலையில், காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த இரண்டு தொகுதிகளிலும் செப்டம்பர் 9-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. செப்டம்பர் 16-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். செப்டம்பர் 17-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.

வேட்புமனுக்களை திரும்பப் பெற செப்டம்பர் 19-ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்படாததற்கு நீதிமன்ற வழக்குகளே முக்கிய காரணமாக உள்ளன.

இந்த 5 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை எதிர்த்து தேர்தல் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அந்த வழக்குகள் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இதற்கிடையே, இந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

வழக்கு விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கான தேர்தல் வழக்குகள் முடிவடைவதற்கு முன்பாக இடைத்தேர்தல் நடத்தப்பட்டால் பல்வேறு சட்ட சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

குறிப்பாக, தேர்தல் வழக்கு முடிவடைவதற்கு முன்பே இடைத்தேர்தல் நடத்தினால் அரசு பணம் செலவிடப்படும் என்றும், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரின் வெற்றி செல்லும் என தேர்தல் வழக்கில் தீர்ப்பு வந்தால் ஒரே தொகுதிக்கு இரண்டு மக்கள் பிரதிநிதிகள் உருவாகும் அரசியல் சாசன ரீதியான சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

இதையடுத்து, அந்த 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்த இடைக்காலத் தடை செப்டம்பர் 8-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

இந்த தேர்தல் வழக்குகள் மற்றும் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு காரணமாகவே தற்போது மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் முடிவுக்கு வந்த பிறகு அல்லது நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை விலக்கப்பட்ட பிறகே திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு உருவாகும்.

இதனால், 7 தொகுதிகள் காலியாக இருந்தாலும், தற்போதைய சூழலில் நீதிமன்ற வழக்குகள் இல்லாத இரண்டு தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தல் கால அட்டவணை

செப்டம்பர் 9 – வேட்புமனு தாக்கல் தொடக்கம்
செப்டம்பர் 16 – வேட்புமனு தாக்கல் கடைசி நாள்
செப்டம்பர் 17 – வேட்புமனு பரிசீலனை
செப்டம்பர் 19 – வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள்
அக்டோபர் 6 – வாக்குப்பதிவு
அக்டோபர் 9 – வாக்கு எண்ணிக்கை

இதனால், தமிழகத்தில் தற்போது நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், நீதிமன்ற வழக்குகளில் சிக்கியுள்ள 5 தொகுதிகளின் இடைத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Byelections for only two constituencies in Tamil Nadu Why were five constituencies including Trichy East left out Here is the reason


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




சினிமா

Seithipunal
--> -->