'தமிழர்களை பத்திரமாக அழைத்து வாருங்கள்'...! - நேபாள வெள்ளம் குறித்து முதலமைச்சர் விஜய் அவசர ஆலோசனை...!
Bring Tamils safely Chief Minister Vijay urgent advice regarding Nepal floods
நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் இயற்கை பேரிடரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தமிழர்களின் பாதுகாப்பு தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.நேபாளத்தில் நிலவும் அசாதாரண சூழல், அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை விரைந்து மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனையில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், அமைச்சர்கள் ராஜ்மோகன், தென்னரசு உள்ளிட்டோர் மற்றும் அயலகத்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களின் தற்போதைய நிலவரத்தை மத்திய அரசுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டு கேட்டறிய வேண்டும் என முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தேவையான உணவு, தங்குமிடம், மருத்துவ உதவி உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.அங்கு சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக தமிழகத்திற்கு அழைத்து வருவதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார்.
இதன் அடுத்தகட்டமாக, நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்ப முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர்.டெல்லியில் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்தித்து, நேபாளத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், மத்திய அரசுடன் நேரடி ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, தமிழர்களை மீட்பதில் ஏற்படும் எந்தவொரு தடையையும் உடனடியாக களைய வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார்.இதனிடையே, நேபாளத்தின் நிலவரத்தை நேரடியாக கண்காணித்து, அங்கு சிக்கியுள்ள தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக ஆஷிஷ் குமார் ஐ.ஏ.எஸ். தலைமையிலான சிறப்பு அதிகாரிகள் குழுவை காத்மாண்டுவுக்கு அனுப்பவும் முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்தக் குழுவினர் காத்மாண்டு சென்று தமிழர்களின் பாதுகாப்பு நிலவரத்தை நேரடியாக கண்காணிப்பதுடன், அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளனர்.நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்டு, பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வருவதற்காக மாநில அரசு, மத்திய அரசு மற்றும் நேபாள அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
English Summary
Bring Tamils safely Chief Minister Vijay urgent advice regarding Nepal floods