கோவில் நகரங்களை குறிவைக்கும் பாஜக? 17 முக்கிய தொகுதிகள் பட்டியல் தயார் !லிஸ்ட் தந்த அமித்ஷா? குழப்பத்தில் EPS!
BJP targeting temple towns List of 17 key constituencies ready Did Amit Shah give the list EPS in confusion
2026 தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வியூகங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக கோவில் நகரங்களை மையமாகக் கொண்டு போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது பாஜக, அன்புமணி தலைமையிலான பாமக, புதிய நீதி கட்சி, புரட்சி பாரதம், ஐஜேகே, தமாகா, தமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிக மற்றும் ராமதாஸ் பாமக ஆகிய கட்சிகள் இதுவரை தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காததால், தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் முழுமையாகத் தொடங்கவில்லை.
இதற்கிடையில், பாஜக அதிமுகவிடம் குறைந்தபட்சம் 40 தொகுதிகளை கோரியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கோரிக்கையில் ஒரு குறிப்பிட்ட “பேட்டர்ன்” பின்பற்றப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. திமுகவை “இந்து விரோத கட்சி” என விமர்சித்து வரும் பாஜக, கோவில் நகரங்கள் அதிகம் உள்ள தொகுதிகளில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் முக்கியமாக திருப்பரங்குன்றம் தொகுதி முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தவிர, ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் (வடக்கு/தெற்கு), மதுரை மேற்கு மற்றும் கிழக்கு, திருவண்ணாமலை, சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர், ஸ்ரீவில்லிப்புத்தூர், திருச்செந்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர் தெற்கு, சேலம் உள்ளிட்ட 16 தொகுதிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. திருப்பரங்குன்றத்தையும் சேர்த்தால் மொத்தம் 17 கோவில் மையத் தொகுதிகள் ஆகின்றன.
கடந்த முறை நெல்லையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருடன் இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து, விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த கோவில் நகரத் தொகுதிகளில் அதிமுகவுக்கும் பாரம்பரிய வாக்கு வங்கி இருப்பதால், அவற்றை பாஜகவுக்கு ஒதுக்குவதில் அதிமுக தலைமையினருக்கு குழப்பம் நிலவுகிறது. குறிப்பாக ஸ்ரீரங்கம் போன்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற நினைவு இருப்பதால், அதை எளிதில் கைவிட அதிமுக தயங்குவதாக கூறப்படுகிறது.
மேலும், பாஜக 25 முதல் 35 தொகுதிகள் வரை போட்டியிட விரும்பும் நிலையில், அதில் 17 கோவில் தொகுதிகளையும் கோருவது அதிமுகவுக்கு சிக்கலாக மாறியுள்ளது. ஏற்கனவே வாக்கு வங்கி குறைந்திருக்கும் சூழலில், பல முக்கிய தொகுதிகளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினால் வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமோ என்ற அச்சமும் அதிமுக வட்டாரத்தில் நிலவுகிறது.
இதனால், கோவில் மையத் தொகுதிகள் தொடர்பான இந்த அரசியல் கணக்கீடு, அதிமுக–பாஜக கூட்டணிக்குள் புதிய இழுபறியை உருவாக்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். வரவிருக்கும் நாட்களில் நடைபெறும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளே இந்த சிக்கலுக்கு தீர்வாக அமையுமா என்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
English Summary
BJP targeting temple towns List of 17 key constituencies ready Did Amit Shah give the list EPS in confusion