அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே தங்க மோதிரம்... ஏமாற்றமளிக்கிறது - பாஜக!
bjp narayanan say about thai maman seer
பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 'தாய் மாமன் தங்க மோதிரம்' என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. த வெ கவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்த அறிவிப்பின் ஆண்டு திட்ட செலவு ரூபாய் 755.83 கோடி. இந்த திட்டத்தினால் சுமார் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் 4.5 லட்சம் குழந்தைகளுக்கு ஒவ்வொரு வருடமும் தங்க மோதிரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
த வெ கவின் தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்த நிலையில் தற்போது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே தங்க மோதிரம் வழங்கப்படும் என்று கூறியிருப்பது ஏமாற்றமளிக்கிறது. மேலும், தமிழகத்தின் நிரந்தரமாக குடியிருப்பவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் என்று சொல்லியிருப்பது முறையல்ல. பல லட்சக்கணக்கான ஏழை புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிற நிலையில், அவர்களுக்கு இந்த திட்டம் மறுக்கப்படுவது நியாயமே அல்ல. முதலமைச்சர் விஜய் அவர்கள் புலம் பெயர் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் அளிக்கப்படும் என்று அறிவிப்பதே முறையானதாக இருக்கும்.
மேலும், இது போன்ற புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் போது இதற்கான உபரி வருவாயை எங்கிருந்து அரசு பெறுகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
bjp narayanan say about thai maman seer