தமிழக மக்கள் தி.மு.க அரசின் ஊழல், பொய் வாக்குறுதிகளால் கடும் சலிப்படைந்து உள்ளனர் - அமித்ஷா தாக்கு!
BJP DMK Govt Amitshah
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டு வந்த 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற மாநிலம் தழுவிய பிரசார யாத்திரை இன்று புதுக்கோட்டையில் நிறைவடைகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார்.
தனது வருகை குறித்து எக்ஸ் (X) தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், தி.மு.க அரசு மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்:
தி.மு.க மீது விமர்சனம்: தமிழக மக்கள் தி.மு.க அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் நிறைவேற்றப்படாத பொய் வாக்குறுதிகளால் கடும் சலிப்படைந்துள்ளதாக அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
யாத்திரையின் வெற்றி: லட்சக்கணக்கான மக்களை ஒன்றிணைத்த இந்தப் பேரணி, மாநிலம் முழுவதும் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், அதன் நிறைவு விழாவில் நிர்வாகிகளுடன் உரையாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வியூகம்:
இந்த வருகையின் போது, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். இதில் வரவிருக்கும் தேர்தலுக்கான கூட்டணி நிலைப்பாடுகள் மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித்ஷாவின் இந்த வருகை மற்றும் புதுக்கோட்டை பொதுக்கூட்டம் தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக பா.ஜ.க கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.