தோல்வியையே விரும்புகிறேன் - பத்மராஜன் பரபரப்பு பேட்டி.!
bathmarajan press meet in dharmapuri
மக்களவை தேர்தல் 2024 அறிவிக்கப்பட்டு நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இந்நிலையில், தருமபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதில் முதல் நபராக மேட்டூரைச் சேர்ந்த ‘தேர்தல் மன்னன்’ என்று கூறப்படும் பத்மராஜன் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் கி.சாந்தியிடம் தாக்கல் செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பத்மராஜன், “இதுவரை 239 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். இம்முறையும் தோல்வியை மட்டுமே விரும்புகிறேன். உலக சாதனை படைக்கும் நோக்கத்திற்காக தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறேன்.

இதுவரை போட்டியிட்டவற்றில் ஒரு தேர்தலில் அதிகபட்சமாக 6000 வாக்குகளை பெற்றுள்ளேன்; ஒரே ஒரு வார்டு தேர்தலில், ஒரு ஓட்டு கூட பெறவில்லை. இதுவரை வாஜ்பாய், அத்வானி, கருணாநிதி, ஜெயலலிதா, எடியூரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா போன்ற பலரை எதிர்த்து போட்டியிட்டுள்ளேன். துணை ஜனாதிபதிக்கு மூன்று முறை போட்டியிட்டுள்ளேன்.
தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்று நான் விருப்பமில்லை. தோல்வியை மட்டுமே விரும்புகிறேன். வெற்றி என்றால் அதை ஒருமுறைதான் அனுபவிக்க முடியும். தோல்வி என்பதை தொடர்ந்து தாங்கிக்கொண்டே இருக்கலாம்.1988 முதல் இதுவரை ஒரு கோடி ரூபாய் வரை தேர்தல் வேட்பு மனுவிற்காக டெபாசிட் செய்துள்ளேன். நான் ஒரு சிறிய பஞ்சர் கடை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன்.
அதன் மூலம் கிடைக்கின்ற வருவாயை வைத்து இந்த டெபாசிட் தொகைகளை கட்டுகிறேன். ஜனாதிபதி தேர்தல், கூட்டுறவு தேர்தல், வார்டு உறுப்பினர் போன்ற எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டு தோல்வி அடைந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
English Summary
bathmarajan press meet in dharmapuri