சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் வருகையால் தவெகவில் குழப்பம்! புலம்ப தொடங்கிய விஜய்யின் விசுவாசிகள்!
Arrival of C Vijayabaskar and MR Vijayabaskar sparks confusion within TVK Vijay loyalists begin to lament
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது.
அரசியல் வட்டாரத் தகவல்களின்படி, முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் இணைப்பு நிகழ்ச்சிக்காக சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் (ECR) இன்று நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களுடன் அவர் கட்சியில் இணைந்துள்ளனர் என்று கூறப்படும் நிலையில், புதுக்கோட்டை மாவட்ட தவெக நிர்வாகிகள் தங்களது எதிர்கால அரசியல் முக்கியத்துவம் குறித்து கவலை தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
கட்சிக்குள் நீண்ட காலமாக பணியாற்றி வரும் நிர்வாகிகள், புதியதாக இணையும் முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டால், தங்களது பங்களிப்பு மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, சி. விஜயபாஸ்கருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டால், அவருடன் வரும் ஆதரவாளர்களுக்கும் மாவட்ட மற்றும் அமைப்பு ரீதியான பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் தற்போது கட்சியில் பணியாற்றி வரும் சில நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அமைச்சரவை மாற்றம் எப்போது நடைபெற்றாலும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பர்வேஸ் வகித்து வரும் பொறுப்பில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வியும் கட்சி வட்டாரங்களில் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
இதேபோல், முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வருகையும் கரூர் மாவட்ட தவெக நிர்வாகிகள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. கரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் சூழலில், எம்.ஆர். விஜயபாஸ்கரையே தவெக வேட்பாளராக நிறுத்துவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த சாத்தியக்கூறு, கட்சிக்காக நீண்ட காலமாக செயல்பட்டு வரும் உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் நிரந்தர தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கட்சியின் ஆரம்ப காலம் முதலே பணியாற்றி வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை சிலர் முன்வைத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் மாவட்டத்தில் கட்சிக்காக தொடர்ந்து பணியாற்றிய நிர்வாகிகள், குறிப்பாக பல்வேறு போராட்டங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், இடைத்தேர்தலில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருப்பதாகவும், அத்தகைய சூழலில் மாற்றுக் கட்சியில் இருந்து இணையும் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமா என்ற கேள்வி எழுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மாற்றுக் கட்சிகளில் இருந்து முக்கிய தலைவர்களை இணைத்துக் கொள்வது கட்சியின் அரசியல் பலத்தை அதிகரிக்கும் என்ற கருத்து ஒரு புறம் நிலவினாலும், அதே நேரத்தில் நீண்ட காலமாக கட்சியில் உழைத்து வரும் நிர்வாகிகளின் எதிர்பார்ப்புகளையும் சமநிலைப்படுத்த வேண்டிய சவால் தவெக தலைமைக்கு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதுவரை சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் இணைப்பு, அவர்களுக்கு வழங்கப்படவுள்ள பொறுப்புகள் அல்லது இடைத்தேர்தல் வேட்பாளர் தொடர்பாக தவெக தலைமையிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
English Summary
Arrival of C Vijayabaskar and MR Vijayabaskar sparks confusion within TVK Vijay loyalists begin to lament