'கர்நாடகா போக பயமா...?' தமிழக அரசின் இரட்டை நிலைப்பாட்டை கிழித்து தொங்கவிட்ட விஜய பிரபாகரன்...!
Are you afraid to go to Karnataka Vijaya Prabhakaran has torn apart Tamil Nadu government double standard
கர்நாடக அரசு மேகதாது அணை அமைக்கும் முயற்சியை கண்டித்து, தேமுதிக சார்பில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி கரையோரத்தில் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கலந்துகொண்டு, காவிரி உரிமை, தமிழக அரசின் செயல்பாடு, கர்நாடக அரசின் நிலைப்பாடு மற்றும் தேசிய அரசியல் குறித்து பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.போராட்டத்தில் பேசிய அவர் தெரிவித்ததாவது,"காவிரி போன்ற தமிழ்நாட்டின் உயிர்நாடி பிரச்சினையில், மக்கள் மத்தியில் நேரடியாக சென்று உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்.

ஒகேனக்கலுக்கு வந்து மக்களை சந்தித்து அவர்களின் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளாதது ஏன் என்ற கேள்வியை தமிழக அரசிடம் எழுப்புகிறேன்.ஐ.பி.எல். தொடரில் கோப்பை வென்றபோது, விராட் கோலியை கர்நாடகத்திற்கு வருமாறு அம்மாநில தலைவர்கள் அழைப்பு விடுத்தனர்.
அப்போது அங்கு உயிரிழப்புகள் நிகழ்ந்திருந்த நிலையிலும் அந்த அழைப்பு வழங்கப்பட்டது. ஆனால் இன்று தமிழக முதல்-அமைச்சர் கர்நாடகத்திற்கு வரக்கூடாது, அங்கு சூழல் சரியில்லை என்று கூறுவது இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது என்று விமர்சித்தார்.தனது அரசியல் வாழ்க்கை முழுவதையும் மக்களுக்காக அர்ப்பணித்த தலைவர் விஜயகாந்த் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
மக்களின் உரிமைக்காக களத்தில் இறங்கி போராடிய அவரது பாதையில்தான் நாங்களும் பயணித்து வருகிறோம் என்றார்.காவிரி நீர் என்பது ஒரு மாநிலத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மக்களின் வாழ்வாதாரத்துடன் இணைந்த இயற்கை வளமாகும். எனவே, இந்தப் பிரச்சினைக்கு மோதல் அல்ல, நிரந்தர தீர்வே தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீட் தேர்வு விவகாரத்தை அரசியல் ரீதியாக அணுகுவதைவிட, அதற்கான தீர்வை அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து தேட வேண்டும். கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், காவிரி விவகாரத்தில் அந்தக் கட்சியின் தேசியத் தலைமையும் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் மத்திய அரசும் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி காவிரி பிரச்சினைக்கு நிலையான தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.டெல்லி வரை சென்று போராடியவர்கள், தமிழ்நாட்டில் வந்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கக் கூடாது.
தமிழக மக்கள் அரசியல் விழிப்புணர்வு மிக்கவர்கள்; உண்மையையும் பொய்யையும் எளிதாகப் புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். எனவே, மக்களை தவறாக வழிநடத்த எந்த முயற்சியும் வெற்றி பெறாது என்றும் விஜய பிரபாகரன் தனது உரையில் தெரிவித்தார்.
English Summary
Are you afraid to go to Karnataka Vijaya Prabhakaran has torn apart Tamil Nadu government double standard