“3 ரெட்டிகள்தான் கனிமவளத் துறையை கட்டுப்படுத்துகிறார்களா?” – உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு.. விஜய்க்கு நெருக்கமானவர்கள் குறித்து பரபரப்பு!
Are the Three Reddys controlling the Department of Mineral Resources Udhayanidhi Stalin allegation Stir over individuals close to Vijay
தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முதல்வர் விஜய்யின் உரையைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக திமுக உறுப்பினர்கள் குற்றம்சாட்டி, அவையில் தர்ணாவில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
முதல்வர் விஜய் சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றிய நிலையில், பழைய விவகாரங்கள் மற்றும் அமலாக்கத்துறை தொடர்பான குறிப்புகளைப் பற்றி பேசிய அவர், எதிர்க்கட்சியினர் எழுப்பிய 15 கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என திமுக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசின் கனிமவளத் துறையில் மூன்று தனிநபர்களின் ஆதிக்கம் இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, “விஷ்ணு ரெட்டி, அவருடைய மச்சான் சுஜய் ரெட்டி, அவருடைய பிசினஸ் பார்ட்னர் அனில் ரெட்டி ஆகிய மூவரும் சேர்ந்து அரசு நடத்தும் கனிமவளங்களை முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்” என குற்றம்சாட்டினார்.
மேலும், சமீபத்தில் சட்டப்பேரவையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, விஷ்ணு ரெட்டிக்கு வெளிப்படையாக நன்றி தெரிவித்ததாகவும், “இதிலிருந்தே யார் ஆட்சியை ஆட்டுகிறார் என்பது தெளிவாகிறது” என்றும் உதயநிதி கூறினார்.இந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை ஒவ்வொன்றாக வெளியிடப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
திமுக தரப்பு குற்றம்சாட்டும் விஷ்ணு ரெட்டி, ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட தொழிலதிபர் என்றும், கல்லூரி காலத்திலிருந்தே விஜய்யின் நெருங்கிய நண்பராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து வருபவர் என்றும் கூறப்படுகிறது.
விஜய் அரசியலுக்கு வந்தபோது, கட்சியின் களப்பணிகள், மாநாட்டு ஏற்பாடுகள் மற்றும் சமூக வலைதள வியூகங்களை ஒருங்கிணைப்பதில் அவர் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது.
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, முதல்வர் விஜய்யின் பொது நிகழ்வுகள் மற்றும் பொது விவகாரங்கள் தொடர்பான ஆலோசகராக அவர் செயல்பட்டு வருவதாகவும், முதல்வரின் தினசரி நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்புகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால், அரசு நிர்வாகத்தில் அவர் தலையிடுவதாக திமுக தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சுஜய் ரெட்டி, விஷ்ணு ரெட்டியின் நெருங்கிய உறவினர் எனக் கூறப்படுகிறது. நிறுவனப் பதிவுகள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில், விஷ்ணு ரெட்டியுடன் இணைந்து சுரங்கம், நிலக்கரி மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் இயக்குநர் பொறுப்புகளை வகிப்பதாக கூறப்படுகிறது.தொழில் சார்ந்த நடவடிக்கைகளை கள அளவில் கவனிக்கும் நபராக அவர் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூவரில் அனில் ரெட்டி ஆந்திராவைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க ஒய்.எஸ். குடும்பத்துடன் உறவு கொண்டவர் என தகவல்கள் கூறுகின்றன. முன்னாள் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி குடும்பத்துடன் அவருக்கு உறவு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சென்னையில் பல ஆண்டுகளாக தொழில் செய்து வரும் அவர், ‘இண்டோ ராக்ஸ் எல்.எல்.பி’ என்ற கனிமவளம் மற்றும் சுரங்கம் சார்ந்த நிறுவனத்தில் விஷ்ணு ரெட்டியுடன் இணைந்து பங்குதாரராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அனில் ரெட்டியின் நிறுவனங்கள் மற்றும் குடும்பத்தினர் தொடர்பாக ஆந்திராவில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததாகவும், மணல் மற்றும் மதுபான முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளில் அவரது பெயர் இடம்பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சிறப்புப் புலனாய்வுக் குழு மற்றும் அமலாக்கத்துறை மேற்கொண்ட சோதனைகளிலும் அவரது பெயர் தொடர்பாக தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. போலி நிறுவனங்கள் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறப்பட்ட விவகாரங்களில் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள சில இடங்களில் மத்திய அமைப்புகள் சோதனை நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்புகளின் சட்டபூர்வ நிலைப்பாடுகள் மற்றும் விசாரணைகளின் தற்போதைய நிலை தனித்தனியாக பார்க்கப்பட வேண்டியதாகும்.
விஷ்ணு ரெட்டி அரசு ஆலோசகர் என்ற பெயரில் அமைச்சரவைக் கூட்டங்கள் மற்றும் தலைமைச் செயலக நிர்வாகத்தில் விதிகளுக்கு புறம்பாக தலையிடுவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மற்றும் எம்.பி. பி.வில்சன் ஆகியோர் காவல்துறையில் புகார் அளித்திருந்ததாக திமுக தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கு மாறாக, விஷ்ணு ரெட்டி முதல்வரின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் கோரிக்கைகள் தொடர்பான பணிகளை அரசு விதிகளுக்கு உட்பட்டே கவனித்து வருவதாக தவெக தரப்பு விளக்கம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, விஜய் மீது வருமான வரித்துறை வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், தனது பலத்தை நிரூபிக்க தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒருபுறம் ஊழலற்ற ஆட்சி மற்றும் வெளிப்படையான நிர்வாகம் குறித்து முதல்வர் விஜய் வலியுறுத்தி வரும் நிலையில், மறுபுறம் அவருக்கு நெருக்கமானவர்கள் அரசு கனிமவள விவகாரங்களில் ஆதிக்கம் செலுத்துவதாக எதிர்க்கட்சியான திமுக குற்றம்சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தவெக தரப்பில் கூறப்படும் விளக்கங்களும், உதயநிதி ஸ்டாலின் விரைவில் வெளியிடுவதாகக் கூறியுள்ள ஆதாரங்களும் அடுத்தகட்ட அரசியல் விவாதத்திற்கு முக்கிய காரணமாக மாறியுள்ளன.
இதனால், தமிழக அரசியலில் தற்போது பேசுபொருளாகியுள்ள ‘3 ரெட்டி’ விவகாரம், சட்டப்பேரவை விவாதத்தைத் தாண்டி அரசியல் களத்தில் அடுத்தடுத்த அதிர்வுகளை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
English Summary
Are the Three Reddys controlling the Department of Mineral Resources Udhayanidhi Stalin allegation Stir over individuals close to Vijay