டாஸ்மாக் கடைகளில் மீண்டும் பாட்டிலுக்கு 10 ரூபாய்.?புலம்பி தீர்க்கும் குடிமகன்கள்.! கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை!
Another 10 extra per bottle at TASMAC shops Drinkers are venting their frustration Calls to step up surveillance
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட சில இடங்களில் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சில கடைகளில் ஒரு மதுபான பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக கூறப்படுவதால், இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் மதுபான விற்பனையை டாஸ்மாக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அரசு நிர்ணயித்த விலைக்கே மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளது. இருப்பினும், சமீபத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்ட பிறகும், சில பகுதிகளில் கூடுதல் வசூல் நடைபெறுவதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
வாடிக்கையாளர்களின் புகாரின்படி, சில டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும், இதுகுறித்து கேட்டால் உரிய விளக்கம் வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சில கடைகளில் தேவையில்லாத கேரி பேக் வழங்கப்பட்டு, அதற்காக கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகவும், பை வேண்டாம் என்று தெரிவித்தாலும் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதாகவும் சில வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அரசு நிர்ணயித்த விலை அமலில் இருக்கும் நிலையில், கூடுதல் வசூல் எவ்வாறு நடைபெறுகிறது, அனைத்து கடைகளிலும் விலைப்பட்டியல், புகார் எண் மற்றும் "கூடுதல் தொகை செலுத்த வேண்டாம்" என்ற அறிவிப்புகள் தெளிவாக காட்சிப்படுத்தப்படுகிறதா என்ற கேள்விகளையும் பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர். இந்த தகவல்கள் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கட்டாயமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளதன்படி, அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் தொகை வசூலிக்கப்பட்டால், வாடிக்கையாளர்கள் 94981 80903 என்ற புகார் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். புகார் உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கூடுதல் வசூல் குறித்த புகார்கள் மீது அதிகாரிகள் விரைந்து விசாரணை நடத்தி, அரசு நிர்ணயித்த விலைக்கே மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.
English Summary
Another 10 extra per bottle at TASMAC shops Drinkers are venting their frustration Calls to step up surveillance