பழனி தொகுதியில் அண்ணாமலை போட்டியா? – ஐபிஎஸ் vs ஐபிஎஸ் மோதல் உருவாகுமா?பாஜகவின் கையில் பெரிய பிளான்! - Seithipunal
Seithipunal


2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டசபைத் தொகுதியில் பாஜக சார்பில் அண்ணாமலை போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, ஆரம்பத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருந்தார். ஆனால் கட்சியின் தேசிய மேலிடம் அவரை தேர்தலில் களமிறக்க விருப்பம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அளித்த பேட்டியிலும், “மேலிடம் சொன்னால் போட்டியிடுவேன்” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

பாஜக தமிழகத்தில் முக்கியமான பெரிய கோயில்கள் உள்ள தொகுதிகளை குறிவைத்து தேர்தல் களம் அமைக்க முயற்சிக்கிறது. அந்த வகையில் முருகனின் மூன்றாம் படை வீடு உள்ள பழனி தொகுதி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

பழனி தொகுதியில் கொங்கு வேளாளர் கவுண்டர், முக்குலத்தோர், பட்டியல் சமூகத்தினர், நாயக்கர், நாடார் மற்றும் சிறுபான்மையினர் என பல்வேறு சமூக வாக்காளர்கள் உள்ளனர். அண்ணாமலை கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அந்த வாக்குகள் அவருக்கு சாதகமாக அமையலாம் என பாஜக கருதுகிறது.

மேலும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. கரூர் மற்றும் திண்டுக்கல் அண்டை மாவட்டங்கள் என்பதால், அந்த பகுதிகளில் அவருக்கு நல்ல அறிமுகம் இருப்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

பழனி தொகுதி கொங்கு மண்டலமும் தென் மாவட்டங்களும் சந்திக்கும் இடம் என்பதால், அங்கு அண்ணாமலை போட்டியிட்டால் இரு பகுதிகளிலும் கூட்டணிக்கு ஆதரவு கிடைக்கும் என பாஜக கணக்கிடுகிறது.

கோவை மாவட்ட தொகுதிகளை பாஜகவுக்கு வழங்க அதிமுக தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால் பழனி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

பழனி தொகுதியில் தற்போது திமுக சார்பில் சிட்டிங் எம்எல்ஏ ஐ.பி. செந்தில் குமார் உள்ளார். இவர் தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமியின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அண்ணாமலை முன்னாள் IPS அதிகாரி என்பதால், அங்கு அவர் போட்டியிட்டால் “IPS vs IPS” என்ற சுவாரஸ்யமான அரசியல் மோதல் உருவாகும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பழனி தேர்தல் வரலாறு

  • 2021 – திமுக: ஐ.பி. செந்தில் குமார் 1,08,566 வாக்குகள் (வெற்றி)

  • அதிமுக: ரவி மனோகரன் 78,510 வாக்குகள்

  • வித்தியாசம்: 30,056

  • 2016 – திமுக: ஐ.பி. செந்தில் குமார் 1,00,045 வாக்குகள் (வெற்றி)

  • அதிமுக: குமாரசாமி 74,459 வாக்குகள்

  • 2011 – அதிமுக: கே.எஸ்.என். வேணுகோபால் வெற்றி

கடந்த இரண்டு தேர்தல்களிலும் திமுக வெற்றி பெற்றதால், தற்போது பழனி தொகுதி திமுகவின் வலுவான கோட்டையாக பார்க்கப்படுகிறது.

ஆனால் அண்ணாமலை போட்டியிட்டால், அந்த தொகுதியில் கடும் போட்டி உருவாகலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai contest in Palani constituency


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->