அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள்? டெல்லியில் பேசியது என்ன? ஓபனாக சொன்ன டிடிவி தினகரன்
How many seats does AMMK have What did he say in Delhi TTV Dhinakaran spoke openly
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பில் அமமுகவுக்கு 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக சில தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தின. மேலும், அமமுக வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடாமல் ‘குக்கர்’ சின்னத்திலேயே களம் இறங்க விரும்புவதாகவும் தகவல்கள் பரவின.
டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய டிடிவி தினகரன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:“மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும், பியூஷ் கோயலையும் சந்தித்து பேசினோம். 234 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் எவ்வாறு தேர்தலை எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் அவர்கள் சென்னைக்கு வர முடியாது. அதனால்தான் நாங்களே டெல்லி சென்று சந்தித்தோம்.”
மேலும் அவர் கூறியதாவது:“பீகார் மாநிலத்தில் போல கூட்டணி அமைப்பை வலுப்படுத்தி தமிழ்நாட்டிலும் தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பான அறிவிப்பு சென்னையில் தான் இறுதியாகும்.”
அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள் வழங்கப்படுகின்றன என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க… முதலில் 5 தொகுதி என சொன்னார்கள், இப்போது 8 தொகுதி என சொல்கிறீர்கள். எங்களுக்கு எத்தனை தொகுதி என்பதைக் கட்சிதான் அறிவிக்கும். அதற்கு முன்பே பல தகவல்கள் பரப்பப்படுகின்றன,”என்று கூறினார்.
மேலும் இன்னும் 2 அல்லது 3 நாட்களில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவடையும் என்றும், விரைவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வர உள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இதனால், அதிமுக – பாஜக கூட்டணியில் அமமுகவுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
English Summary
How many seats does AMMK have What did he say in Delhi TTV Dhinakaran spoke openly