அரசுப் பேருந்துகளின் பாதுகாப்பு, பராமரிப்பில் திமுக அரசின் அலட்சிய போக்கே, தொடர் விபத்துகளுக்கு காரணம்; அண்ணாமலை குற்றசாட்டு..!
Annamalai alleges that the DMK governments negligence in bus maintenance is the reason for the continuous accidents
அரசுப் பேருந்துகளின் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த அலட்சிய போக்கில், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவு தான் நேற்றைய (திட்டக்குடி) பேருந்து விபத்து. திமுக அரசு காட்டும் அலட்சியத்தின் விளைவாகவே தொடர் விபத்துகள் நடக்கின்றன என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
''கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, அரசுப் பேருந்து மோதி, 09 பேர் உயிரிழந்த செய்தி, மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அளிக்கிறது. உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபகாலமாக, அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும், மிகவும் அதிகரித்திருக்கின்றன. தொடர்ச்சியாக நடக்கும் அரசு பஸ் விபத்துகள், பஸ்களின் பராமரிப்பு, டிரைவர் பணிநேரம், பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவற்றில், திமுக அரசு காட்டும் அலட்சியத்தின் விளைவே இந்த தொடர் விபத்துகள். அரசுப் பேருந்துகள் பராமரிப்புக்கு நிதி ஒதுக்கப்படுகிறதா, அந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுகிறது.
கடந்த மாதமே, அரசுப் பேருந்துகளின் பாதுகாப்பு, பராமரிப்பு குறித்த அலட்சியத்தைப் பற்றி எச்சரித்திருந்தோம். ஆனால் திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததன் விளைவு தான் நேற்றைய பேருந்து விபத்து.
தொடர் விபத்துக்களையும், அது தொடர்பான எச்சரிக்கைகளையும் உதாசீனப்படுத்திய திமுக அரசே இந்த விபத்துக்கான முழு பொறுப்பு.'' என்று அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.
English Summary
Annamalai alleges that the DMK governments negligence in bus maintenance is the reason for the continuous accidents