தமிழகத்தில் வேஸ்ட்டாய் போன அமித்ஷாவின் வியூகங்கள் – எடுபடாத எடப்பாடி கணக்கு! சோகத்தில் என்டிஏ!அடுத்து என்ன?
Amit Shah strategies in Tamil Nadu have gone to waste an unaccountable account NDA in tragedy What next
ஒடிசாவில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்த வெற்றி, ஆந்திரா மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் கூட்டணி மூலம் கிடைத்த வளர்ச்சி… இவை அனைத்தும் அமித்ஷாவின் தேசிய அளவிலான செல்வாக்கை மேலும் உயர்த்தியுள்ளன. ஆனால் இதே வியூகங்கள் தமிழ்நாட்டில் மட்டும் எந்த வடிவிலும் பலன் அளிக்காத சூழல் உருவாகியுள்ளது. கேரளத்தில் கூட சுரேஷ் கோபி மூலம் பாஜக கணக்கைத் தொடங்கியிருந்தாலும், தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அமித்ஷா மேற்கொண்ட கணக்குகள் இதுவரை சரியாக எடுபடவில்லை.
மெகா கூட்டணி உருவாகும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்ட போதிலும், சிறிய கட்சிகள் கூட கதவைத் தட்டாத நிலை என்.டி.ஏ. கூட்டணிக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே நேரத்தில், தமிழக அரசியல் களம் 2026 தேர்தலை முன்வைத்து சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி வலுவாகத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது; காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் கூடுதல் சீட்டுகள் கேட்பினும், கூட்டணிக்கு பெரிய பாதிப்பு இல்லை எனக் கூறப்படுகின்றது.
எதிர்க்கட்சியான அதிமுக கடந்த ஆண்டு முதலே பாஜக கூட்டணியிலேயே இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், 2026-இலும் அதே நிலை தொடரும் எனவும் அமித்ஷா தெளிவுபடுத்தியிருந்தார். மேலும் பாமகவை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி உருவானது 200 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும், தமிழகத்தில் பெரிய கட்சிகள் என்று சொல்லப்படுவது அதிமுகவும் பாஜகவும் மட்டுமே. “மெகா கூட்டணி” என அமித்ஷா எதிர்பார்த்த திட்டம் காகிதத்திலேயே நின்றுள்ளது. பாமக, தேமுதிக, அமமுக போன்ற கட்சிகள் கூட்டணிக்கு வராமல், தங்கள் பாதையைத் தேடி சென்றுவிட்டன. செங்கோட்டையன் திடீரென பாஜகவில் இணைந்தது முதல் ஓபிஎஸ்–நயினார் நாகேந்திரன் வாய்வாதம், டிடிவி தினகரனின் அதிருப்தி, பாமக குடும்ப அரசியல் என பல குழப்பங்கள் கூட்டணிக்குள் இருந்தே எழுந்துவிட்டன.
இத்தகைய சூழலில், பீகாரில் அமித்ஷா வெற்றிகரமாக பயன்படுத்திய சமூக வாக்கு சமன்பாட்டு (Social Engineering) திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது எவ்வளவு கடினமோ அவர் உணர்ந்திருப்பார். வடஇந்திய மாநிலங்களில் யாதவ்–முஸ்லீம் வாக்கு எதிராக, பிற சமூகங்களை ஒருங்கிணைத்து பாஜக வெற்றியைப் பெற்றது. ஆந்திராவில் பவன் கல்யாண் மூலம், நாயுடுவை மீண்டும் கூட்டணிக்குள் இழுத்ததும் வெற்றியளித்தது. ஆனால் தமிழகத்தில் அந்த தந்திரம் செயல்படவில்லை.
காரணம் – பாஜகவுக்கு தமிழகத்தில் இன்னும் வலுவான மக்கள் நம்பிக்கை உருவாகாமல் போனது. 2021 தேர்தலில் டிடிவி தினகரனை கூட்டணிக்குள் சேர்க்க அமித்ஷா முயன்றபோதும், எடப்பாடி பழனிசாமி மறுத்ததால் அது நடக்கவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தனியாகப் போட்டியிட வேண்டி வந்தது; அண்ணாமலையின் தீவிர நிலைப்பாடு, எடப்பாடியின் அதிருப்தி, கூட்டணிக் கேள்விகள் என பல பிரச்சினைகள் தொடர்ச்சியாக எழுந்தன.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு நடிகர் விஜயை அணுகி பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாலும் பலன் கிடைக்கவில்லை. பொதுக்குழுவில் நேரடியாக “நான் முதலமைச்சர் வேட்பாளர்” என அறிவித்த விஜய், என்.டி.ஏ.வுடன் எந்த பேச்சும் நடத்த வேண்டாம் என தெளிவுபடுத்திவிட்டார். டிடிவியும் விஜயை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கியதால், தென் மாவட்டங்களில் பாஜக–அதிமுக கூட்டணிக்கு புதிய சவால் உருவாகியுள்ளது.
மேலும் பாமகவின்றி வட மாவட்டங்களில் வன்னியர் வாக்கு உறுதி இல்லை; ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோர் இல்லாமல் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்கு கிடைப்பதும் சாத்தியமில்லை. பாமக, தேமுதிக, ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்ற யாருமே என்.டி.ஏ.வுக்கு இன்னும் வெளிப்படையாக ஆதரவு தரவில்லை.
மொத்தத்தில், மெகா கூட்டணி உருவாகாமல், தற்போதுள்ள கூட்டணியும் வலுப்பெறாமல், புதிய கட்சிகளும் இணைவதற்குத் தயங்குவதால், என்.டி.ஏ. மிகுந்த குழப்பநிலையில்தான் உள்ளது. இதற்கிடையில் நடிகர் விஜயின் எழுச்சி அதிமுக–பாஜக முகாமுக்கு கூடுதல் சிக்கல்களையும், பாஜக தலைமைக்கு அதிக தலைவலியையும் உருவாக்கி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English Summary
Amit Shah strategies in Tamil Nadu have gone to waste an unaccountable account NDA in tragedy What next