கூட்டணியா? தனித்துப் போட்டியா? செங்கோட்டையன் இருந்தும் தடுமாறுகிறாரா விஜய்? கைநழுவும் பெரும் தலைகள்!
Alliance Solo competition Is Vijay stumbling despite being Sengottaiyan Big heads slipping
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக–அதிமுக என இரு பெரும் கட்சிகளுக்கிடையே நடைபெற்று வந்த பாரம்பரிய அரசியல் போட்டி, நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வருகையால் புதிய திருப்பத்தை சந்தித்துள்ளது. ஆனால், தவெக எந்தக் கூட்டணியில் இடம் பெறும்? அல்லது தனித்து போட்டியிடுமா? என்பதற்கான விடை இன்னும் வெளிவராததால், அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்ப்பும் குழப்பமும் ஒருசேர நிலவுகிறது.
விஜய்க்கு கிடைத்த மிகப்பெரிய அரசியல் பலமாகக் கருதப்படுவது, கட்சி தொடங்கிய குறுகிய காலத்திலேயே தமிழக அரசியலில் தவெக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்பதே. விஜய் பங்கேற்ற கூட்டங்களில் திரண்ட மக்கள் கூட்டம், திமுக மற்றும் அதிமுக போன்ற திராவிட கட்சிகளையே வியக்க வைத்ததாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவே, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், டாக்டர் ராமதாஸ் (மூத்தவர்) போன்ற அனுபவம் வாய்ந்த தலைவர்களின் பார்வை தவெக பக்கம் திரும்பியது.
பொதுவாக புதிதாக தொடங்கும் கட்சிகள், ஏற்கனவே உள்ள அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தங்களின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும். ஆனால், ஓபிஎஸ், தினகரன், ராமதாஸ் போன்றோருக்கு ஓரளவு வாக்கு வங்கி இருந்தபோதும், அவர்களை விஜய் இதுவரை தவெகவில் இணைத்துக்கொள்ளாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது கட்சியின் தனித்துவத்தை காக்க எடுத்த முடிவா? அல்லது அரசியல் அனுபவக் குறைபாட்டின் விளைவா? என்பது தெளிவாக தெரியவில்லை.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் அடிமட்ட அமைப்புகள், பலமான கூட்டணிகள், நீண்ட அரசியல் அனுபவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. தவெகவின் கூட்டணி கதவுகள் திறந்திருப்பதாக விஜய் கூறியிருந்தாலும், இதுவரை எந்தப் பெரிய கட்சியும் அவருடன் இணைந்ததாக அறிவிப்பு வெளியாகவில்லை. ஒரு சிறிய கட்சியைக்கூட தவெகவுக்குள் கொண்டு வர முடியாமல் இருப்பது, அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், தவெக தனித்து போட்டியிடும் முடிவை எடுக்கக்கூடும் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன. சீமான், கமல்ஹாசன் போல பெண்கள் வேட்பாளர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவும் விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா காலத்திற்குப் பிறகு பெண்கள் வாக்குகளை திமுக, மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களின் மூலம் தன் பக்கம் திருப்பியுள்ள நிலையில், அந்த வாக்கு வங்கியை விஜய் குறிவைப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் ஒரே நேரத்தில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
ஆனால், தனித்து போட்டியிடுவது தவெகின் அடையாளத்தையும் நேர்மையையும் மக்களிடம் உயர்த்திக் காட்டினாலும், அனுபவம் வாய்ந்த தலைவர்களின் வாக்கு வங்கியைத் தவிர்ப்பது வெற்றிக்கான வாய்ப்பை குறைக்கலாம் என்ற எச்சரிக்கையும் எழுகிறது. தேமுதிக போன்ற கட்சிகள் ஒருகாலத்தில் பெரிய அலையை உருவாக்கியபோதும், சரியான கூட்டணி கணக்குகள் இல்லாததால் வாக்குச் சிதறலுக்கு உள்ளாகி பின்னடைவை சந்தித்ததை அரசியல் வரலாறு நினைவூட்டுகிறது.
அதேபோல், தவெகவும் வாக்குச் சிதறலுக்கான காரணியாக மாறி, எதிரணிகளுக்கு சாதகமாகும் அபாயம் உள்ளதாக விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். மூத்த தலைவர்கள் அருகில் இருந்தும், அமமுக, வைத்திலிங்கம் போன்றோரை தவெகவுக்குள் கொண்டு வர முடியாதது எதிர்பாராத ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்ற விஜய்யின் இறுதி முடிவு, தவெகின் எதிர்கால அரசியல் பாதையை மட்டுமல்ல, 2026 தேர்தல் முடிவுகளையும் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக அமையப்போகிறது. விஜய் எந்த திசையில் யோசிக்கப் போகிறார் என்பதை அறிய, அரசியல் களம் தற்போது பொறுத்திருந்து பார்க்கும் நிலைக்கு வந்துள்ளது.
English Summary
Alliance Solo competition Is Vijay stumbling despite being Sengottaiyan Big heads slipping