ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் – திமுகவின் ஆணவத்துக்கு முடிவு வரும்! விளாசிய சீமான்!
Airport murthy faces criminal charges DMK arrogance will come to an end Seeman is a disgrace
புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை “திமுக அரசின் ஆணவம் மற்றும் அரசியல் பழிவாங்கும் போக்கு” என்று சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
சீமான் தனது எக்ஸ் தள பதிவில்,“புரட்சித் தமிழகம் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் தொடுத்தது சனநாயகத்தையே படுகொலை செய்யும் செயலாகும். கடந்த நான்கு ஆண்டுகளாக திமுக அரசு எதிர்க்கட்சியினரை அடக்கிப் போட பொய் வழக்குகளைப் பயன்படுத்தி வருகிறது. இது எதேச்சதிகார மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்,“இந்திய ஒன்றியத்தில் பாஜக அரசு எப்படி எதிர்க்கட்சியினரை, பத்திரிகையாளர்களை, மனித உரிமை போராளிகளை அடக்க முயற்சி செய்கிறதோ, அதேபோல் தமிழ்நாட்டிலும் திமுக அரசு காவல்துறை மற்றும் சட்டங்களை தவறாக பயன்படுத்தி கொடுமை செய்கிறது. ஊடகங்களில் தொடர்ந்து குற்றங்களை வெளிச்சமிட்ட ஏர்போர்ட் மூர்த்தியை தாக்கியவர்களை விடுவித்து, தாக்குதலுக்கு உள்ளானவரையே கைது செய்தது திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி” என்று கண்டனம் தெரிவித்தார்.
மேலும்,“பேச்சுரிமை, கருத்துரிமை பற்றி மேடைகளில் பேசும் திமுக தலைவர்கள், தங்கள் ஆட்சியில் நடக்கும் குற்றங்கள், ஊழல்கள் குறித்து விமர்சனங்களை சகிக்க முடியாமல் அரசியல் தலைவர்களையும், பத்திரிகையாளர்களையும் பொய்வழக்குகளில் சிக்க வைக்கிறார்கள். இது திமுகவின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.
திமுக அரசு எதேச்சதிகார மனப்பான்மையில் நடந்து கொள்கிறது. ஆனால் அதிகாரம் நிரந்தரமானது அல்ல. இந்த ஆணவ ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்” என்றும் சீமான் எச்சரித்துள்ளார்.
சீமான் தனது அறிக்கையின் முடிவில்,“ஏர்போர்ட் மூர்த்தி மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தையும், பொய்வழக்குகளையும் திமுக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Airport murthy faces criminal charges DMK arrogance will come to an end Seeman is a disgrace