அதிமுக மீண்டு எழும்! எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்!நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! இபிஎஸ் வேண்டுகோள்!
AIADMK will rise again I am waiting for everything You just cooperate EPS appeal
அதிமுக தற்போது எதிர்கொண்டு வரும் அரசியல் சவால்களை சமாளித்து கட்சியை மீண்டும் வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன் என்றும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் தங்களது அரசியல் பயணத்தில் பல்வேறு சோதனைகள், துரோகங்கள் மற்றும் நெருக்கடிகளை சந்தித்தபோதும் அவற்றை வென்று கட்சியை வெற்றிப் பாதையில் வழிநடத்தினர் என்று குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக 1988, 1989 காலகட்டங்களில் ஜெயலலிதா சந்தித்த கடினமான அரசியல் சூழ்நிலைகளையும், 1996 சட்டமன்றத் தேர்தலில் கட்சி வெறும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையையும் நினைவுகூர்ந்த அவர், அந்த நேரங்களிலும் கட்சி மீண்டும் எழுச்சி பெற்று ஆட்சியை பிடித்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
கழகப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு இரவு பகலாக உழைத்து வருவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, பல்வேறு இன்னல்கள், சோதனைகள் மற்றும் துரோகங்களை நிர்வாகிகள் மற்றும் கோடிக்கணக்கான தொண்டர்களின் ஆதரவுடன் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், கட்சியில் பல்வேறு பதவிகளை அனுபவித்த சிலர் தற்போது கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் அவர்களின் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்றும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆசீர்வாதம் கட்சிக்கு எப்போதும் துணையாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கட்சியின் தற்போதைய நிலையை எண்ணி தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், தீவிர அதிமுக தொண்டருமான கே.எஸ். மகேந்திரன் உயிரிழந்த செய்தி தன்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் மனம் தளர வேண்டாம் என்றும், எந்தவித விபரீத முடிவுகளிலும் ஈடுபடக்கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். வெற்றியும் தோல்வியும் அரசியலில் மாறி மாறி வரக்கூடியவை என்றும், தோல்வியை கண்டு அதிமுக ஒருபோதும் துவண்டு விடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலையிலிருந்து கட்சியை மீட்டெடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் மகத்தான வெற்றியை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்காக அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இறுதியாக, "எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்" என்ற ஜெயலலிதாவின் கனவை அனைவரும் ஒன்றிணைந்து நனவாக்க வேண்டும் என்றும், தற்போதைய சூழ்நிலையால் யாரும் அச்சமோ பதற்றமோ அடைய வேண்டாம் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
AIADMK will rise again I am waiting for everything You just cooperate EPS appeal