திமுகவில் பதவிகளுக்கு வயது வரம்பு... தலைமைப் பதவிகளுக்கு மட்டும் விதிவிலக்கா? உடன்பிறப்புகள் மத்தியில் கொந்தளிப்பு!
Age limit for DMK posts An exemption only for top leadership roles Uproar among party cadres
2026 சட்டசபைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவில் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக மாவட்டச் செயலாளர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கட்சியின் மாவட்டங்களைப் பிரித்து புதிய நிர்வாகிகளை நியமிக்க திமுக தலைமை முடிவு செய்துள்ளது.
இதன்படி, தற்போது 77 ஆக உள்ள திமுக மாவட்டங்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்த்தப்பட உள்ளது. இரண்டு அல்லது மூன்று சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கிய வகையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட உள்ளன. இதன் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவிலான முக்கிய பொறுப்புகள் கிடைக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
அதேபோல், திமுக செயற்குழுவில் கிளைச் செயலாளர், வட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிளைச் செயலாளருக்கு 45 வயதும், வட்டச் செயலாளருக்கு 50 வயதும், ஒன்றியச் செயலாளருக்கு 60 வயதும், மாவட்டச் செயலாளருக்கு 70 வயதும் உச்சவரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் ஒரே பொறுப்பில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் தொடர முடியாது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு முதலில் இரண்டு முறை மட்டுமே என்ற கட்டுப்பாடு அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அது மூன்று முறை என திருத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மாநகரச் செயலாளர் பதவியும் நீக்கப்பட உள்ளது.
இந்த மாற்றங்களால் 70 வயதை கடந்துள்ள பல மாவட்டச் செயலாளர்கள் தங்களது தற்போதைய பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு அமைப்பு செயலாளர் உள்ளிட்ட வேறு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற பேச்சும் கட்சிக்குள் நிலவி வருகிறது.
ஆனால், இதுதான் தற்போது திமுகவுக்குள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் முதல் கிளை வரை பல்வேறு அமைப்பு பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியின் அதிகாரமிக்க தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளுக்கு மட்டும் வயது வரம்பு நிர்ணயிக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி சில திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அதேபோல், இளைஞர் அணி பொறுப்புக்கும் வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கீழ்மட்டத்தில் இருந்து மாவட்ட அளவு வரை தலைமுறை மாற்றத்தை வலியுறுத்தும் கட்சி, மேல்மட்ட முக்கியப் பதவிகளில் மட்டும் அதே நடைமுறையை ஏன் பின்பற்றவில்லை என சிலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக தற்போதைய மறுசீரமைப்பால் பதவியை இழக்கும் நிலையில் உள்ள சில சீனியர்களின் ஆதரவாளர்களே இந்த விவகாரத்தை சமூக வலைதளங்களில் எழுப்பி வருவதாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. நேரடியாக தலைமையிடம் எதிர்ப்பு தெரிவிக்க முடியாத நிலையில், மறைமுகமாக தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே புதிய மாவட்டச் செயலாளர்களை எவ்வாறு தேர்வு செய்வது என்பதிலும் திமுகவில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. போட்டி அதிகமாக இருக்கும் இடங்களில் கட்சிக்குள் தேர்தல் நடத்தலாமா அல்லது தலைமையே நிர்வாகிகளை நியமிக்கலாமா என்ற விவாதமும் தொடர்கிறது.
ஒட்டுமொத்தமாக, தேர்தல் தோல்விக்குப் பிறகு திமுகவில் கொண்டு வரப்படும் அமைப்பு மாற்றங்கள் கட்சியின் கீழ்மட்டத்தில் மட்டுமல்லாமல், மேல்மட்டத்திலும் புதிய அரசியல் கணக்குகளை உருவாக்கி வருகின்றன. வயது வரம்பு என்ற சீர்திருத்தம் அனைத்து பதவிகளுக்கும் சமமாக பொருந்துமா, அல்லது சில முக்கியப் பதவிகளுக்கு மட்டும் விதிவிலக்கு தொடருமா என்பதே தற்போது உடன்பிறப்புகளின் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.
English Summary
Age limit for DMK posts An exemption only for top leadership roles Uproar among party cadres