“சேகர்பாபு மீது கோபம் இல்லை; வருத்தம்தான்” – உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
I am not angry with Sekar Babu I am only disappointed Udhayanidhi Stalin sensational remarks
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது தனக்கு கோபம் இல்லை என்றும், அவர்மீதும் சென்னை கிழக்கு மாவட்டத்தின் மீதும் தனக்கு இருக்கும் உரிமை காரணமாகவே வருத்தம் ஏற்பட்டதாகவும் திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சட்டசபைத் தேர்தல் தோல்விக்கான காரணங்களை திமுக வெளிப்படையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். தேர்தலின்போது எதிரி யார் என்பது தெரியாமல் தங்களுக்குள் சண்டையிட்டுவிட்டதாகவும், தற்போது எதிரி யார் என்பது தெளிவாகத் தெரிந்துவிட்டதால் மீண்டும் அந்த தவறை செய்யக்கூடாது என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து பேசிய உதயநிதி, தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று மீண்டும் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்ற நம்பிக்கையில் இருந்ததாக தெரிவித்தார். ஆனால், எதிரி யார் என்பதை சரியாக அடையாளம் காணாமல் தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதித்ததாக அவர் குறிப்பிட்டார்.
சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு தான் வழக்கமாக அடிக்கடி வந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகக் கூறிய உதயநிதி, கடந்த நான்கு மாதங்களாக அங்கு வரவில்லை என்றும் தெரிவித்தார். இதனால் சேகர்பாபு தன் மீது கோபம் இருப்பதாக நினைத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
“அது கோபம் இல்லை. வருத்தம். வருத்தம் மட்டும் இல்லை. சேகர்பாபு மீதும் இந்த மாவட்டம் மீதும் எனக்கு இருக்கக்கூடிய உரிமை” என்று உதயநிதி தெரிவித்தார்.
தொடர்ந்து திமுகவின் தேர்தல் தோல்விக்கு பல்வேறு காரணங்களை கூறி தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறினார். சினிமா மாயை, கவர்ச்சி, சமூக வலைதளங்களின் தாக்கம் காரணமாக இளம் தலைமுறையினரிடம் திமுக அரசின் திட்டங்களும் சாதனைகளும் போதுமான அளவில் சென்றடையவில்லை என்று பல காரணங்களை கூற முடியும் என்றாலும், அவற்றை மட்டுமே தோல்விக்கான காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
குறிப்பாக, முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலேயே ஏற்பட்ட தோல்வியை திமுக எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் உதயநிதி தெரிவித்தார். இந்த தோல்வி திமுகவுக்கு மிகப்பெரிய பாடம் என்றும் அவர் கூறினார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்தாலும், திமுக அளிக்கும் ஆதரவின் அடிப்படையில்தான் அந்த ஆட்சி நடைபெற்று வருவதாக உதயநிதி விமர்சித்தார். “மாற்றம், மாற்றம் என்று சொல்லி ஏமாற்றம்தான் செய்கிறார்கள்” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
திமுக மக்களுக்காக தொடங்கப்பட்ட இயக்கம் என்றும், தேர்தல் தோல்வியை கண்டு கட்சி பயந்துவிடாது என்றும் கூறிய உதயநிதி, இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு அடுத்தகட்ட அரசியல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
English Summary
I am not angry with Sekar Babu I am only disappointed Udhayanidhi Stalin sensational remarks