விஜய் களத்திற்கு வந்தபின்..அரசியல் சுவாரஸ்யமாகும்! அடுத்த 6 மாத தமிழக அரசியல் மொத்தமாக மாறும்.. அண்ணாமலை பேட்டி!
After Vijay enters the field politics will be interesting Tamil Nadu politics will change completely in the next 6 months Annamalai interview
அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் முன்வைத்த “பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும்” என்ற கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் திறந்த ஆதரவு தெரிவித்த நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
செங்கோட்டையன், “அடுத்த 10 நாட்களில் பிரிந்தவர்களை எடப்பாடி பழனிசாமி இணைக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். இது அதிமுக உள்பட தமிழக அரசியலையே சூடேற்றியது.
இந்த சூழ்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,“செங்கோட்டையன் விவகாரம் தொடர்பாக நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது. அதிமுகக்கு தனியாக தலைவர்கள், தொண்டர்கள் இருக்கிறார்கள். அந்தக் கட்சியின் உள்துறை விவகாரம் குறித்து அந்தக் கட்சியினர் பேச வேண்டியது தான்” என்றார்.
“செங்கோட்டையன் பேசியதை நானும் பார்த்தேன். அதற்கு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளார். எனவே நான் தனியாக எதையும் சொல்ல விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.
மேலும் அண்ணாமலை,“திருமாவளவன் திமுக கூட்டணியில் இருக்கிறார். அதிமுக குறித்து அவருக்கு ஏன் அக்கறை? அதிமுக எப்படி இருந்தாலும் அவருக்கு என்ன சம்பந்தம்? ஆனால், வெளியில் இருந்து சிலர் பதட்டம் அடைகிறார்கள்.
தமிழகத்தில் திமுக கூட்டணி மீண்டும் வெல்லாது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) வலிமையாக உள்ளது. தேர்தல் இன்னும் 7–8 மாதங்களில் தான் நடக்கிறது. அதுவரை எல்லாம் சுமூகமாக இருக்கும்” என்றார்.
அண்ணாமலை மேலும்,“பொறுப்பு தரப்படவில்லை என்பதால் கட்சியில் யாரும் மறக்கப்படவில்லை. அலிஷா அப்துல்லா போன்ற புதிய தலைவர்கள் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.
பாமக இன்னும் வலிமை பெறும். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். அவர் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அடுத்த 6 மாதங்களில் தமிழக அரசியல் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். புதிய மாற்றங்களை மக்கள் காண்பார்கள்” எனக் குறிப்பிட்டார்.
English Summary
After Vijay enters the field politics will be interesting Tamil Nadu politics will change completely in the next 6 months Annamalai interview