உதயநிதி சகாப்தத்துக்கு பிள்ளையார் சுழி?சீனியர்கள் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி! ஸ்டாலின் ஃப்ரீ ஹேண்ட்!
A new beginning for the Udhayanidhi era An end to the dominance of seniors Stalin gets a free hand
திமுகவின் உட்கட்டமைப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மாற்றத்தை அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் அமைப்பு ரீதியான மாவட்டங்களின் எண்ணிக்கை 77-ல் இருந்து 110 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு மூலம் கட்சியின் நிர்வாக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், இளம் நிர்வாகிகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, பல ஆண்டுகளாக மாவட்டச் செயலாளர் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த மூத்த நிர்வாகிகளின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் புதிய தகுதி விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஜனவரி 22-ம் தேதி நடைபெற்ற திமுக உயர்நிலைக் செயல் திட்டக் கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆக நிர்ணயிக்கப்பட்டதாகவும், ஒருவர் அதிகபட்சமாக 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவியை வகிக்க முடியும் என முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த புதிய விதிகளால் தற்போது பதவியில் உள்ள 13 முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பல மூத்த நிர்வாகிகள் தங்களது மாவட்டப் பொறுப்புகளை இழக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு பதிலாக 50-க்கும் மேற்பட்ட புதிய மற்றும் இளம் முகங்களுக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை வழங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
நிர்வாக வசதிக்காக சென்னை மட்டும் 10 உட்கட்சி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை மற்றும் அரசியல் முக்கியத்துவம் கருதி சோழிங்கநல்லூர் தனி அமைப்பு மாவட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோயம்புத்தூர், மதுரை, சேலம் ஆகிய முக்கிய நகரங்கள் தலா 5 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
திருச்சி, கடலூர், ஈரோடு, திருப்பூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகள் தலா 4 மாவட்டங்களாகவும், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் ஆகியவை தலா 3 மாவட்டங்களாகவும் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகியவை தலா 2 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
மேலும் கரூர் 2 ஆகவும், புதுக்கோட்டை 3 ஆகவும், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் தலா 2 ஆகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தில் கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் தலா 3 மாவட்டங்களாகவும், தருமபுரி 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நீலகிரி மட்டும் 3 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கிய ஒற்றை மாவட்டமாகத் தொடர்கிறது.
தென் மாவட்டங்களிலும் இதேபோன்ற மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திண்டுக்கல், தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகியவை தலா 3 மாவட்டங்களாகவும், திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம் ஆகியவை தலா 2 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 110 மாவட்டங்களின் எல்லைகளுக்கு ஏற்ப நகரம், ஒன்றியம், பகுதி, பேரூர், வட்டம் மற்றும் கிளைக் கழகங்களின் எல்லைகளை மறுவரையறை செய்து, 15 நாட்களுக்குள் பரிந்துரைகளை அனுப்புமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது.
இந்த ஒட்டுமொத்த மறுசீரமைப்பும் வெறும் நிர்வாக மாற்றமாக மட்டுமல்லாமல், திமுகவின் எதிர்கால தலைமுறை மாற்றத்துக்கான முக்கிய நகர்வாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அடிமட்டத் தொண்டர்களை நேரடியாக ஒருங்கிணைப்பது, இளம் நிர்வாகிகளுக்கு அதிகாரம் வழங்குவது மற்றும் மூத்த நிர்வாகிகளின் நீண்டகால ஆதிக்கத்தை குறைப்பது ஆகியவற்றின் மூலம் கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியாக இது கருதப்படுகிறது.
இதனால், திமுகவின் எதிர்கால கள அரசியல் நடவடிக்கைகளில் உதயநிதி ஸ்டாலினின் பங்கு மேலும் அதிகரிக்கப் போகிறதா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. 110 மாவட்டங்களாக கட்சியைப் பிரித்து இளம் நிர்வாகிகளுக்கு அதிக வாய்ப்பு வழங்கும் இந்த மெகா மறுசீரமைப்பு, திமுகவில் புதிய அதிகார மையத்துக்கான தொடக்கமாக அமையுமா என்பதுதான் அரசியல் வட்டாரங்களில் தற்போது பேசப்படும் முக்கிய கேள்வியாக உள்ளது.
English Summary
A new beginning for the Udhayanidhi era An end to the dominance of seniors Stalin gets a free hand