அமமுகவுக்கு 8–9 தொகுதிகள்? அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில்டிடிவி தினகரன்! விரைவில் அறிவிப்பு? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) எந்தெந்த கட்சிகள் இணையப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வரிசையில், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்) கூட்டணியில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், தேமுதிக இந்த கூட்டணியில் இணையுமா என்ற கேள்வியும் தொடர்ந்து எழுந்து வருகிறது. இதேபோல், ஏசி சண்முகம், ஜான் பாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) உள்ளிட்ட கட்சிகள் என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அமமுகவும் இந்த கூட்டணியில் இடம்பிடிப்பதா என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த விவாதங்களுக்கு வலு சேர்க்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி – அமித்ஷா சந்திப்பு முடிந்த அடுத்த நாளிலேயே டிடிவி தினகரன் டெல்லியில் முகாமிட்டிருந்தார். பின்னர், அமித்ஷாவை சந்தித்த பிறகு, அவர் என்டிஏ கூட்டணியில் இணைய ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆரம்பத்தில் அமமுக தரப்பில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கோரப்பட்டதாகவும், அதற்கு பதிலாக பாஜக தரப்பில் 7 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என கூறப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஜனவரி 23ஆம் தேதி சென்னை அருகே மதுராந்தகத்தில் என்டிஏ கூட்டணி சார்பில் நடைபெற உள்ள மாநாடு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. இந்த மாநாட்டுக்கான வரவேற்பு பதாகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதுவே, எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்று, என்டிஏ கூட்டணியில் இணைய டிடிவி தினகரன் சம்மதம் தெரிவித்துவிட்டார் என்பதற்கான தெளிவான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

அதிமுக – பாஜக இடையிலான தொகுதி பங்கீடு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, மொத்தம் 56 தொகுதிகள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல். அந்த 56 தொகுதிகளுக்குள் அமமுக, புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியன் கட்சி, தமாகா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பங்கீடு செய்யப்படும் என அமித்ஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில், அமமுகவுக்கு 8 முதல் 9 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டிருக்கலாம் என விவரம் அறிந்தவர்கள் கணிக்கின்றனர்.

இதனால், நீண்ட காலமாக இழுபறியாக இருந்த டிடிவி தினகரனின் கூட்டணி முடிவு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால், 2026 சட்டசபைத் தேர்தலுக்கான அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி முழுமையான வடிவத்தை பெறும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

8 seats for AMMK TTV Dhinakaran in AIADMK led NDA alliance Announcement soon


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->