2026 சட்டசபை தேர்தல்...! கனிமொழி எம்.பி. தலைமையில் DMK ஆலோசனை...!
2026 assembly election Kanimozhi MP DMK consultation led by
தமிழக அரசியலில் அடுத்த பெரும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் முடிவுக்கு வர உள்ளதால், 2026 மே மாதத்துக்குள் புதிய சட்டசபை தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் உள்ளது. இதையடுத்து, தேர்தல் நடத்தும் பணிகளுக்கான ஆரம்ப நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் தொடங்கி விட்டது.
ஒருபுறம் நிர்வாக ரீதியான ஏற்பாடுகள் வேகமெடுக்க, மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் இறங்கி விட்டன. தற்போதைய அரசியல் சூழலைக் கணக்கில் கொண்டால், தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க. ஆகிய மூன்று பெரிய அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் வகையிலும், 2026 தேர்தல் நான்கு முனைப் போட்டியாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.

ஆளும் தி.மு.க. ஏற்கனவே தனது கூட்டணி கட்டமைப்பை உறுதி செய்துள்ளது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் இணைந்து அடுத்த சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க. தயாராகி வருகிறது.
தேர்தல் பணிகளில் தி.மு.க. ஒரு படி முன்னே சென்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த ஜூன் மாதமே ‘உடன்பிறப்பே வா’ என்ற பெயரில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனை கூட்டங்களை தொடங்கி, கள நிலவரத்தை நேரடியாக அறிந்து வருகிறார்.
அதேசமயம், தேர்தலின் முக்கிய ஆவணமாக கருதப்படும் தேர்தல் அறிக்கையை தயாரிக்க தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.இந்த பின்னணியில், 2026 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார். இதில் தேர்தல் வாக்குறுதிகள், மக்கள் எதிர்பார்ப்புகள் மற்றும் ஆட்சி சாதனைகள் குறித்த விரிவான விவாதங்கள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
2026 assembly election Kanimozhi MP DMK consultation led by