ஒரு கிலோ கொழுப்பு குறைய எவ்வளவு தூரம் வாக்கிங் செய்ய வேண்டும்? – எளிமையாக விளக்கிய உடல் எடை குறைப்பு நிபுணர்!
How far should you walk to lose one kilo of fat A weight loss expert explains it simply
இன்றைய காலகட்டத்தில் உடல் பருமன் என்பது பலருக்கும் பெரிய சவாலாக மாறியுள்ளது. அலுவலக வேலை, கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரியும் சூழல், உடல்செயல்பாடு குறைவு ஆகிய காரணங்களால் உடல் எடை வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால், எடை குறைக்க பலரும் நடைப்பயிற்சி (வாக்கிங்) செய்யத் தொடங்குகிறார்கள். ஆனால் சில வாரங்கள் தொடர்ந்து வாக்கிங் செய்தும் எடை குறையவில்லை என பலர் புலம்புவதையும் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், உடல் எடை குறைப்பில் வாக்கிங் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும், ஒரு கிலோ கொழுப்பைக் குறைக்க எவ்வளவு நடக்க வேண்டும் என்பதையும் உடல் எடை குறைப்பு நிபுணர் அஞ்சலி சச்சான் தெளிவாக விளக்கியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ தற்போது கவனம் ஈர்த்து வருகிறது.
அஞ்சலி சச்சான் கூறுகையில், “ஒரு கிலோ உடல் கொழுப்பு என்பது சுமார் 7,700 கலோரிகளுக்கு சமம். இது நீர் எடை அல்லது உடல் வீக்கம் அல்ல; உடலில் சேமிக்கப்பட்டுள்ள உண்மையான கொழுப்பு. கொழுப்பு என்பது சேமிக்கப்பட்ட ஆற்றல் என்பதால், அது கரைய நேரம் எடுக்கும். ஆனால் ஒருமுறை அந்த கொழுப்பு எரிந்துவிட்டால், அது நிரந்தரமாக குறைந்துவிடும்” என்று விளக்கினார்.
மேலும், நடைப்பயிற்சியின் போது எவ்வளவு கலோரிகள் எரிகின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டார். “நீங்கள் நடக்கும்போது ஒவ்வொரு 1,000 ஸ்டெப்ஸ்களுக்கும் சுமார் 50 முதல் 70 கலோரிகள் வரை எரிகின்றன. ஒவ்வொரு அடிக்கும் உடல் சக்தியைப் பயன்படுத்துகிறது, தசைகள் செயல்படுகின்றன, சமநிலை பேணப்படுகிறது. இதன் அடிப்படையில் பார்த்தால், ஒரு கிலோ கொழுப்பைக் குறைக்க சுமார் 1,28,000 முதல் 1,50,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டியிருக்கும்” என்றார்.
இந்த எண்ணிக்கையை கேட்டுப் பயப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார். “தினமும் 10,000 முதல் 15,000 ஸ்டெப்ஸ் வரை நடந்தால், சுமார் 10 முதல் 12 நாட்களில் ஒரு கிலோ கொழுப்பைக் குறைக்க முடியும். இது உணவுக் கட்டுப்பாடு அல்லது கூடுதல் உடற்பயிற்சிகளை கணக்கில் கொள்ளாமல் கிடைக்கும் பலன். நடைப்பயிற்சி மக்கள் நினைப்பதை விட மிகவும் சக்தி வாய்ந்தது” என்று அஞ்சலி சச்சான் தெரிவித்தார்.
அதே நேரத்தில், கொழுப்பு குறைப்பு என்பது ஒரே நாளில் நடக்கும் மேஜிக் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். “தொடர்ச்சியான முயற்சி அவசியம். தினமும் நீங்கள் வைக்கும் ஒவ்வொரு ஸ்டெப்ஸையும் கலோரி எரிப்பாக நினைத்தால், அது உங்களுக்கு ஊக்கத்தை தரும். இதுவே நீடித்த மற்றும் நிலையான எடை குறைப்புக்கு வழிவகுக்கும்” என்றார்.
நடைப்பயிற்சியின் கூடுதல் நன்மைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். வாக்கிங் மூலம் கலோரி எரிப்பு படிப்படியாக நடக்கும், பசியைத் தூண்டும் ஹார்மோன்கள் பாதிக்கப்படாது, மாதவிடாய் சுழற்சியில் மாற்றம் ஏற்படாது, அதிக சோர்வு வராது, மனநிலை மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும் என அவர் கூறினார்.
மொத்தத்தில், உடல் எடையையும் கொழுப்பையும் குறைக்க வாக்கிங் என்பது எளிதான, பாதுகாப்பான மற்றும் அனைவருக்கும் ஏற்ற ஒரு வழி என்றும், உடனடி பலன் எதிர்பார்க்காமல் தொடர்ச்சியாக நடைப்பயிற்சி செய்வதே வெற்றிக்கான முக்கிய ரகசியம் என்றும் அஞ்சலி சச்சான் தெரிவித்தார்.
English Summary
How far should you walk to lose one kilo of fat A weight loss expert explains it simply