இதயத்தை காக்கும் மருந்து சிறுநீரகத்திற்கு மறைமுக ஆபத்தா...? - ரோசுவாஸ்டாடின் குறித்து புதிய ஆய்வு எச்சரிக்கை...!
heart protecting drug hidden danger kidneys New study warns about rosuvastatin
இதய நோய்களைத் தடுக்கப் பயன்படும் ஸ்டேடின் வகை மருந்துகளில் முக்கியமான ஒன்றாக விளங்கும் ரோசுவாஸ்டாடின் குறித்து சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு, கவனிக்கத் தக்க புதிய தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது.இன்றைய வேகமான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி குறைவு மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பழக்கங்கள் காரணமாக கொலஸ்ட்ரால், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதனால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் தினசரி ஸ்டேடின் மருந்துகளை நம்பி வருகின்றனர்.இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்-யைச் சேர்ந்த டாக்டர் ஜங்-இம் ஷின் தலைமையிலான ஆய்வுக் குழு, 2011 முதல் 2019 வரை சுமார் 9.47 லட்சம் நோயாளிகளின் மருத்துவப் பதிவுகளை ஆய்வு செய்துள்ளது.
அதில், ரோசுவாஸ்டாடின் இதயத்தை பாதுகாக்கும் திறன் கொண்டதாக இருந்தாலும், அதைப் பயன்படுத்தும் சிலருக்கு சிறுநீரக சேதம் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, அடோர்வாஸ்டாடின் பயன்படுத்துவோருடன் ஒப்பிடும்போது, ரோசுவாஸ்டாடின் பயன்படுத்துவோருக்கு சிறுநீரில் இரத்தம் தோன்றும் அபாயம் 8% அதிகமாகவும், புரத கசிவு 17% அதிகமாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், அதிக அளவில் இந்த மருந்தை எடுத்துக்கொள்வோருக்கு சிறுநீரக செயலிழப்பு அபாயம் 15% வரை உயரும் என தெரிவிக்கப்படுகிறது.இதற்கிடையில், FDA ஏற்கனவே சிறுநீரக பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இந்த மருந்தை தினசரி 10 மில்லிகிராமை மீறக் கூடாது என வழிகாட்டி இருந்தபோதிலும், நடைமுறையில் சுமார் 44% நோயாளிகளுக்கு இந்த அளவை மீறி மருந்து வழங்கப்படுவது ஆய்வில் வெளிச்சம் போட்டுள்ளது.
இதயத்தை காக்கும் நோக்கில் எடுத்துக்கொள்ளப்படும் இந்த மருந்து, கண்காணிப்பின்றி நீண்டகாலம் பயன்படுத்தப்பட்டால் சிறுநீரக செயல்பாட்டை மெல்ல பாதிக்கும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதனால் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை போன்ற கடுமையான நிலைகளுக்கும் தள்ளப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவர்கள் கூறுவதாவது, ரோசுவாஸ்டாடின் மற்றும் அடோர்வாஸ்டாடின் இரண்டும் இதய பாதுகாப்பில் ஏறக்குறைய ஒரே பயனை வழங்கினாலும், சிறுநீரக பாதுகாப்பு கோணத்தில் அடோர்வாஸ்டாடின் சற்றே பாதுகாப்பானதாக இருக்கக்கூடும். இருப்பினும், ஒவ்வொரு நபரின் உடல்நிலை, வயது, ஏற்கனவே உள்ள நோய்கள், மருந்தளவு போன்றவை மாறுபடும் என்பதால், மருத்துவர் ஆலோசனை இன்றி மருந்தை மாற்றுவது அல்லது நிறுத்துவது ஆபத்தானதாகும்.
மேலும், ரோசுவாஸ்டாடின் எடுத்துக்கொள்பவர்கள் தவறாமல் காலந்தோறும் சிறுநீரக செயல்பாடு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். உடலில் வீக்கம், சிறுநீரின் நிற மாற்றம், சோர்வு, சிறுநீர் குறைவு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.ஆரோக்கியமான உணவு பழக்கம், குறைந்த உப்பு மற்றும் கொழுப்பு உட்கொள்வது, ஒழுங்கான உடற்பயிற்சி, உடல் எடை கட்டுப்பாடு போன்றவை இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் முக்கியமான வழிமுறைகளாகும்.
இந்த ஆய்வு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக அல்ல; விழிப்புணர்வை உருவாக்குவதற்காகவே என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். மருந்தை திடீரென நிறுத்துவது மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்பதால், மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றுவதே பாதுகாப்பான நடைமுறை என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
heart protecting drug hidden danger kidneys New study warns about rosuvastatin