தேசிய ஓபன் ரேங்கிங் தொடரில் தன்னை விளையாட விடாமல் இந்திய மல்யுத்த சம்மேளனம் தடுக்கிறது; வினேஷ் போகத் குற்றச்சாட்டு..!
Vinesh Phogat alleges that the Wrestling Federation of India is preventing her from competing in the National Open Ranking Series
கடந்த 2024-ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அவர், ஒலிம்பிக்கில் இறுதிப்போட்டியை எட்டிய போதிலும் அவருக்கு பதக்கம் மறுக்கப்பட்டது.
அதாவது, அன்றைய தினத்தின் காலையில் நிர்ணயிக்கப்பட்ட எடை வரம்பைவிட 100 கிராம் அதிகமாக இருந்ததற்காக வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, மல்யுத்த விளையாட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர், தாயகம் திரும்பிய அவர், தான் வகித்துவந்த ரயில்வே வேலையையும் ராஜினாமா செய்து விட்டு, காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் கால் பதித்தார்.
அக்கட்சி சார்பில் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாகத் தேர்வானார். இருப்பினும், தனது ஒலிம்பிக் கனவைத் துரத்துவதற்காக மீண்டும் மல்யுத்தத்திற்கு தயாராகி வருவதாக வினேஷ் போகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தேசிய ஓபன் ரேங்கிங் தொடரில் தன்னை விளையாட விடாமல் சம்மேளனம் தடுப்பதாக வினேஷ் போகத் குற்றம்சாட்டியுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான தகுதிச் சுற்றுக்குச் செல்ல இந்த தொடரில் பங்கேற்பது அவசியமாகும்.
இது குறித்து வினேஷ் போகத் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் பேசியுள்ளதாவது;
'இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் புகார் அளித்த ஆறு வீராங்கனைகளில் தானும் ஒருவர். பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் என்றாலும், தற்போதையச் சூழ்நிலை காரணமாகத் தனது பெயரை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளேன்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 தனது மறுபிரவேசத்தைத் தடுக்க மல்யுத்த சம்மேளனம் முயல்கிறது. பிரிஜ் பூஷன் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், தற்போதைய தலைவர் சஞ்சய் சிங் மூலமாக அவரே சம்மேளனத்தைக் கட்டுப்படுத்துகிறார். பிரிஜ் பூஷனின் சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் கோண்டாவில், அவருக்குச் சொந்தமான கல்லூரியிலேயே ஓபன் ரேங்கிங் மல்யுத்தத் தகுதிப் போட்டிகளை நடத்தச் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.
இது நேர்மையான போட்டிக்கு வழிவகுக்காது. நடுவர்கள் முதல் புள்ளிகள் வரை அனைத்தும் அவர்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்' என்று கடுமையாகி விமர்சித்து பேசியுள்ளார்.
English Summary
Vinesh Phogat alleges that the Wrestling Federation of India is preventing her from competing in the National Open Ranking Series