காஷ்மீரில் கனமழையின் எதிரொலி: வைஷ்ணவி தேவி கோவில் யாத்திரை நிறுத்தம்; நிலச்சரிவில் சிக்கி 05 பேர் பலி; 14 பேர் காயம்..!
Vaishnavi Devi temple pilgrimage halted due to heavy rains in Kashmir
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரியாசி மாவட்டத்தில் கத்ராவுக்கு அருகிலுள்ள திரிகுடா மலைகளில் மாதா வைஷ்ணவி தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பக்தர்கள் பாரம்பரியமாக வருடா வருடம் கத்ராவிலிருந்து 13 கி.மீ நடைபயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, அங்கு கனமழை காரணமாக வைஷ்ணவி தேவி கோவிலுக்கு பாரம்பரியாக பக்தர்கள் செல்லும் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கோவிலுக்குச் செல்லும் பாதையில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டதில், அதில் சிக்கிய பக்தர்கள் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், தோடா மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளத்தால் 15-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அங்கும் சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் தண்ணீர் அபாய எல்லையைத் தாண்டி செல்வதால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது.

மேலும், காஷ்மீரில் பல்வேறு இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையால் 04 பேர் உயிரிழந்தனர். அத்துடன், ஜம்முவின் பகவதி நகரில் உள்ள பாலம் சேதம் அடைந்துள்ள நிலையில், இதில் சிக்கி உள்ள கார்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் அங்கு மொபைல் நெட்வொர்க் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, இந்திய ராணுவம் களமிறங்கி காடிகர் பகுதியில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட்டுள்ளது. இதற்கிடையில், கதுவா, சம்பா, தோடா, ஜம்மு, ரம்பன் மற்றும் கிஷ்த்வார் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Vaishnavi Devi temple pilgrimage halted due to heavy rains in Kashmir