பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: பாஜக நிர்வாகி கைது செய்யவேண்டும்: பழங்குடியின அமைப்பு போராட்டம்..!
Tribal organization protests demands arrest of BJP executive who sexually harassed female police officer
மத்தியப் பிரதேசத்தில் பெண் காவலருக்கு ஒருவருக்கு பாஜக பிரமுகர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபரை கைது செய்யக் கோரி பழங்குடியின அமைப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு, மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்தில் பாஜக எம்பி ஒருவரை அவதூறாகப் பேசியதாகக் கூறி, பழங்குடியினரின் ‘ஜெய் ஆதிவாசி யுவ சக்தி’ (ஜெய்ஸ்) அமைப்பைச் சேர்ந்த தொண்டர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அன்றிலிருந்து இரு தரப்புக்கும் இடையே புகைச்சல் நீடித்து வருகிறது. இதனிடையே, மத்தியப் பிரதேசத்தில் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சித்தி மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய பாஜக நிர்வாகி ஒருவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், பர்வானி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் தலைமைக் காவலர் ஒருவர், பாஜகவின் சிலாவாத் மண்டல் தலைவர் அஜய் யாதவ் மீது பாலியல் சீண்டல் மற்றும் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளார்.

அதாவது, அஜய் யாதவ் தன்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அதைத் தடுத்தபோது கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். குறித்த புகாரைத் தொடர்ந்து, ‘ஜெய்ஸ்’ அமைப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அஜய் யாதவை உடனடியாகக் கைது செய்து, அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அத்துடன் இந்த விவகாரம் ஆளுங்கட்சி பிரமுகர் சம்பந்தப்பட்டது என்பதால் மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட அஜய் யாதவ் மீதான புகார் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
Tribal organization protests demands arrest of BJP executive who sexually harassed female police officer