சுங்கச்சாவடி வருடாந்திர சந்தா திட்டம் – ரூ.3,000 செலுத்தினால் ஒரு வருடம் வரை சுங்கக் கட்டணமின்றி பயணிக்கலாம்! முழு விவரம் இதோ
Toll booth annual subscription plan Pay Rs 3000 and travel toll free for up to a year Here are the full details
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வழக்கமான நெடுஞ்சாலை பயணிகளுக்காக புதிய FASTag ஆண்டு சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் இந்த திட்டத்தின் கீழ், பயனாளர்கள் ரூ.3,000 நிலையான கட்டணத்தை செலுத்துவதன் மூலம், ஒரே ஆண்டில் 200 பயணங்கள் அல்லது ஒரு முழு ஆண்டுவரை – எது முதலில் முடிவடைகிறதோ அதன் அடிப்படையில் – சுங்கக் கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த புதிய வசதி கார்கள், ஜீப்புகள், வேன்கள் போன்ற தனியார் இலகுரக வாகனங்களுக்கு மட்டும் பொருந்தும். அலுவலகத்திற்காக தினமும் பயணம் செய்யும் நபர்கள், நகரங்களுக்கு இடையேயான தொழிலாளர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை வழக்கமாகப் பயன்படுத்தும் பயணிகளுக்கு இந்த திட்டம் மிகுந்த நன்மையாக இருக்கிறது.
புதிய ஆண்டு பாஸ் திட்டம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளில் மட்டுமே செல்லுபடியாகும். இது மாநில நெடுஞ்சாலைகள், நகராட்சி அல்லது பஞ்சாயத்து சாலைகள் மற்றும் மாநில சுங்கச் சாவடிகளில் பயன்படுத்த முடியாது என்பதை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
இந்த பாஸை பெற பயனர்கள் RajmargYatra மொபைல் செயலி அல்லது அதிகாரப்பூர்வ NHAI இணையதளத்தில் சென்று பதிவு செய்யலாம். வாகன எண், பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் FASTag ஐடி ஆகிய விவரங்களை பதிவு செய்த பின்னர், ரூ.3,000 கட்டணத்தை UPI, டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலமாக செலுத்த முடியும். பாஸ் 2 மணி நேரத்துக்குள் செயல்படுத்தப்படும் என்றும், உறுதிப்படுத்தல் தகவல் SMS அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்றும் NHAI தெரிவித்துள்ளது.
இந்த வசதி ஒரே வாகனத்துடன் இணைக்கப்பட்ட FASTag-க்கே மட்டுமே பொருந்தும். 200 பயணங்கள் முடிந்ததும் அல்லது 365 நாட்கள் கடந்ததும் பாஸ் தானாகவே முடிவடையும். பயனர்கள் இந்த வசதியை தொடர விரும்பினால், அதே தொகையை மீண்டும் செலுத்தி பாஸை புதுப்பிக்கலாம்.
சுங்கச் சாவடிகளில் நெரிசலைக் குறைத்து, டிஜிட்டல் கட்டண முறையை ஊக்குவிப்பதையும், பயணிகளின் செலவினங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த புதிய திட்டம் அமலுக்கு வருகிறது.
English Summary
Toll booth annual subscription plan Pay Rs 3000 and travel toll free for up to a year Here are the full details