மும்பை மாநகராட்சி தேர்தல்; ஆளும் பாஜ கூட்டணி முன்னிலை; அதளபாதாளத்தில் காங்கிரஸ்..!
The ruling BJP alliance is leading in the Mumbai municipal elections
மும்பை மாநகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதில், ஆளும் பாஜ - சிவசேனா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, தானே, புனே போன்ற பிற மாநகராட்சிகளிலும் ஆளுங்கட்சிகளே முன்னிலை வகிக்கின்றன.
மகாராஷ்டிராவில் உள்ள மும்பை, நவி மும்பை, தானே, புனே, நாக்பூர் உள்ளிட்ட 29 மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நேற்று நடைபெற்றது. இதில், மும்பை மாநகராட்சியில் 52.94 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில் இன்று கலாய் 10:00 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.
தற்போதைய நிலவரப்படி பாஜ - சிவசேனா கூட்டணி 94 இடங்களில் முன்னிலையில் உள்ளது. உத்தவ் சிவசேனா - மகாராஷ்டிர நவநிர்மான் சேனா 65 இடங்களிலும், காங்கிரஸ் வெறும் 11 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. ஆண்டுக்கு ரூ.74,400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டைக் கொண்ட மும்பை மாநகராட்சி, கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக பிளவுபடாத சிவசேனா கட்சியின் வசம் இருந்தது.

ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக பாஜ தலைமையிலான ஆளுங்கூட்டணி மாநகரத்தை நிர்வகித்து வருகின்றது. இந்த நிலையில், மாநகராட்சியை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிற நிலையில், இந்த தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி கட்சிகளான பாஜவும், சிவசேனாவும் இணைந்து போட்டியிட்டுள்ளன.
இதை எதிர்த்து உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியும், ராஜ்தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியும் களமிறங்கின. காங்கிரஸ் கட்சி, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. இவர்களுக்கிடையே மும்முனை போட்டி நிலவுகிறது. இருப்பினும், தேர்தல் முடிவில் ஆளுங்கட்சியே முன்னிலை வகிக்கிறது.
ஏக்நாத் ஷிண்டேவின் கோட்டையாக கருதப்படும் தானேவில் அவரது சிவசேனா கட்சி முன்னிலை வகிக்கிறது. பவார் குடும்பத்தின் கோட்டையான புனேவில், அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசை விட, பாஜ முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
The ruling BJP alliance is leading in the Mumbai municipal elections