'மின்னஞ்சலில் பயன்படுத்திய ஆபாச வார்த்தை பாலியல் சீண்டலாகாது': உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
The Punjab High Court delivers a landmark verdict ruling that the use of obscene language in an email does not constitute sexual harassment
அலுவலக மின்னஞ்சலில் பயன்படுத்தப்பட்ட ஆபாச வார்த்தை பாலியல் சீண்டலாகாது என பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பெண் ஊழியர், கடந்த 2018-ஆம் ஆண்டு தனது உடல்நலக் குறைவு காரணமாக 04 நாட்கள் மருத்துவ விடுப்பு கோரியிருந்தார். ஆனால், அந்த நிறுவனத்தின் இயக்குனர், முக்கியமான பணி இருப்பதை காரணம் காட்டி விடுப்பு அளிக்க மறுத்ததோடு, மின்னஞ்சல் வாயிலாக ஆபாசமான ஒரு ஆங்கில வார்த்தையை பயன்படுத்தியுள்ளார்.
இதனால் மனமுடைந்த அந்த பெண் ஊழியர் அன்றைய தினமே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்திற்கும் ஊழியருக்கும் இடையே சட்ட ரீதியான நோட்டீஸ்கள் பரிமாறப்பட்டுள்ளன. சுமார் 04 மாதங்கள் காலதாமதமாக கடந்த 2019-ஆம் ஆண்டு அந்த இயக்குனர் மீது பாலியல் தொல்லை அளித்ததாக போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர். ஆனாலும், இந்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி இயக்குனர் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த அரியானா உயர் நீதிமன்ற நீதிபதி கீர்த்தி சிங், கடந்த சில தினங்களுக்கு முன் தீர்ப்பு வழங்கினார்.
அப்போது, மின்னஞ்சலில் பயன்படுத்தப்பட்ட அந்த ஆபாச வார்த்தை நாகரிகமற்றது மற்றும் மரியாதைக்குறைவானது என்பதில் ஐயமில்லை. ஆனால், அந்த வார்த்தை பாலியல் ரீதியான உள்நோக்கத்தையோ அல்லது ஒரு பெண்ணின் கண்ணியத்தை பாதிக்கும் வகையிலான சமிக்ஞைகளையோ கொண்டிருக்கவில்லை என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்திய தண்டனைச் சட்டம் 354ஏ பிரிவின் கீழ் ஒருவரை தண்டிக்க தேவையான பாலியல் ரீதியான அத்துமீறல் அந்த மின்னஞ்சலில் இல்லை என்றும், அலுவலக ரீதியான பிரச்சினையில் பயன்படுத்தப்பட்ட தவறான வார்த்தையை பாலியல் பலாத்கார முயற்சியாகவோ அல்லது பாலியல் தொல்லையாகவோ கருத முடியாது என்று கூறி இயக்குனர் மீதான வழக்கை ரத்து செய்துள்ளார்.
மேலும், அந்த இயக்குனர் சண்டிகரில் உள்ள ஏழை நோயாளி நல நிதிக்கு 20,000 ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி மேலும், உத்தரவிட்டுள்ளார்.
English Summary
The Punjab High Court delivers a landmark verdict ruling that the use of obscene language in an email does not constitute sexual harassment