நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம்: எதிர்வரும் 25-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் திறப்பு..!
The countrys longest glass bridge to be inaugurated in Visakhapatnam on the 25th
நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வரும் 25-ஆம் தேதி திறந்து வைக்கப்படவுள்ளது. இதுவரை காலமும் கேரளாவின் வாகமனில் உள்ள, 125 அடி நீள கண்ணாடி பாலம், நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலம் என்ற பெருமை பெற்றுவந்தது. விசாகப்பட்டினத்தில் கைலாசகிரி மலை உச்சியில் இருந்து வங்கக்கடலை ரசிக்கும் வகையில் சுமார் 07 கோடி ரூபாய் செலவில் 180 அடி நீளமுள்ள இந்த கண்ணாடி பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 100 பேர் வரை இந்த பாலத்தில் நடந்து செல்ல முடியும். எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு நேரத்தில் 40 பேர் வரை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்படுள்ளது. அத்துடன், கடினமான எடைகளை தாங்கும் அளவுக்கு 40 எம்.எம்., தடிமன் கொண்ட ஜெர்மன் கண்ணாடிகள் மூன்று அடுக்குகளாக இந்த பாலத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இது தவிர, கண்ணாடிகளை தாங்கி பிடிக்க, 40 டன்கள் எடையிலான எக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பாலம் மலை உச்சியில் இருப்பதால், மணிக்கு 250 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலும், தாங்கும் அளவுக்கு இதன் கட்டுமானம் வலுவாக கட்டப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணியர் சுத்தியலால் அடித்தாலும் உடையாத அளவுக்கு மிகுந்த தடிமனான கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதால், புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போதும், பாலத்திற்கு எந்த சேதமும் ஏற்படாது என கூறப்படுகிறது.
குறித்த பாலம் கடல் மட்டத்தில் இருந்து, 862 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால் இதன் மீது நடந்து செல்லும்போது, பறப்பது போன்ற மெய்சிலிர்க்கும் அனுபவத்தை சுற்றுலா பயணியர் பெற முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. வரும் 25-ஆம் தேதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்த கண்ணாடி பாலத்தை திறந்து வைக்கவுள்ளார். மேலும், இதன் அருகிலேயே 5.5 கோடி ரூபாய் மதிப்பில் பிரமாண்ட திரிசூலம் கட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், வருங்காலங்களில் கைலாசகிரி மலை சுற்றுலா பயணியரை இவை வெகுவாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
The countrys longest glass bridge to be inaugurated in Visakhapatnam on the 25th